[ad_1]
பாளையங்கோட்டை சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவந்த சமூக ஆர்வலர் முகிலன், வைகோ-வின் வேண்டுகோளை ஏற்று, தனது போராட்டத்தை இன்று முடித்துக்கொண்டார்.
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கடுமையாக எதிர்த்துவருபவர், சமூகப் போராளியான முகிலன். மக்கள் போராட்டங்களில் பங்கேற்பதற்காக அரசு வேலையைத் துறந்த அவர், தமிழக மக்களின் முக்கியமான போராட்டங்களில் பங்களிப்புச் செய்துள்ளார். நொய்யல் ஆறு மாசுபடுவதைத் தடுக்க, அவர் தொடர்ந்து குரல்கொடுத்துவருகிறார். காவிரி ஆற்றில் மணல் கொள்ளை நடப்பதைக் கண்டித்து, 'காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்' நடத்திவருகிறார்.
அத்துடன், கூடங்குளம் போராட்டம், தாது மணல் கொள்ளை, மீத்தேன் எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம், நிலத்தடி நீர் பாதுகாக்க வலியுறுத்தும் போராட்டங்கள், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு என பொதுமக்கள் நடத்தும் போராட்டங்களில் இவரும் கலந்து கொண்டுள்ளார். அதன் காரணமாகப் பலமுறை சிறை சென்றுள்ளார். போலீஸாரின் தடியடியைச் சந்தித்த அனுபவங்களும் அவருக்கு இருக்கிறது. இந்த நிலையில், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றபோது தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக அவர் கைதுசெய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் உள்ள அவர், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடிய மக்கள்மீது தொடரப்பட்ட வழக்கை ரத்துசெய்ய வேண்டும். ஃபெஃப்சி, கோக் நிறுவனங்களுக்கு தாமிரபரணித் தண்ணீரை வழங்கக்கூடாது. தாமிரபரணி ஆற்றில் புதிதாக மணல் குவாரி தொடங்கக்கூடாது, வழக்கறிஞர் செம்மணி தாக்குதலுக்குக் காரணமான போலீஸார்மீது வழக்குத் தொடர வேண்டும், செய்தியாளர்கள்மீது தொடரப்பட்ட வழக்கை ரத்துசெய்ய வேண்டும், நிலத்தடி நீர் ஆதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக உண்ணாவிரதம் இருந்தார்.
அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்துவந்தார். இந்த நிலையில், ம.தி.மு.க பொதுச்செயலாளரான வைகோ, அவரது உடல்நலன்குறித்து கவலை கொண்டதுடன், உண்ணாவிரதத்தை உடனடியாக முடித்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். இந்தத் தகவலை முகிலனின் வழக்கறிஞர்களான அப்துல் நிஜாம், அக்மல் கசாலி ஆகியோர் முகிலனிடம் தெரிவித்து, அவரது தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தினர்.
சிறைத்துறை அதிகாரிகளும் அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவரது கோரிக்கைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டுவிட்டதாகவும், அது தொடர்பாக அதிகாரிகள் பரிசீலனை செய்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து, முகிலன் இன்று தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார். பின்னர், அவரது உடல்நலம்குறித்து சிறைத்துறை மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினார்கள்.
வைகோவின் வேண்டுகோளை ஏற்ற முகிலன்; தொடர் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்!
TAGS :
COMMENTS