[ad_1]

பாரதிய ஜனதா கட்சியோ கூட்டணி வைக்கிற கட்சிகள் யாராக இருந்தாலும் அவர்களை வீழ்த்துவதுதான் விடுதலைச் சிறுத்தைகளின் முதல் கடமை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

 

அவர் கூறுகையில், ’பிரதமர் நரேந்திரமோடி ஆட்சிப் பொறுப்பேற்றபோது கறுப்புப் பணத்தை ஒழிக்கப் போவதாகவும், வெளிநாட்டில் உள்ள பணத்தை மீட்கப் போவதாகவும் வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதி என்னானது. மோடி பிரதமர் ஆகி 3 ஆண்டுகள் ஆனநிலையில் கொடுத்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை.

 

தேசத்திற்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையையும், ஜி.எஸ்.டி. வரியையும் மக்கள்மீது திணித்துள்ளார். இரண்டு நடவடிக்கைகளும் மிகப்பெரிய பேரிடராக அமைந்துள்ளது. உள்நாட்டு மொத்த உற்பத்தி 3 சதவிகிதம் சரிந்துள்ளது. சிறுதொழில் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பி.ஜே.பியின் மூத்தத் தலைவர்கள் யஷ்வந்த் சின்ஹா, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரே மத்திய அரசின் நடவடிக்கையை விமர்சித்துள்ளனர்.

 

எனவே, பொருளாதாரக் கொள்கையின் தோல்வியை ஒப்புக்கொண்டு மோடி, நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். தமிழக அரசியலில் பி.ஜே.பி தலையீடு செய்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. உட்கட்சி பூசலை தீவிரப்படுத்தும் வகையில் அதிகார வலிமையைப் பயன்படுத்தி தமிழக அரசை பினாமி அரசாக மாற்றி விட்டார்களோ? என்று எண்ணத் தோன்றுகிறது. இதனை மக்கள் கவனித்து வருகிறார்கள்.

 

இன்று டிடிவி தினகரன் தரப்பினர் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்துகிறார்கள். இது அரசியல் உள்நோக்கம் கொண்ட ஒரு நிகழ்வு. ஆட்சி நிர்வாகத்தின் தோல்வியை மறைக்க இந்த வருமான வரி சோதனை நடத்துகிறார்கள். அ.தி.மு.க.வின் ஒரு அணியைச் சேர்ந்த சசிகலா-தினகரன் உறவினர்கள் வீடுகள், ஜெயா டி.வி. அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்திவருகிறது. வருமான வரித்துறை ஒரு அதிகாரம் உள்ள அமைப்பு. வரி ஏய்ப்பவர்களை அடையாளம் கண்டு, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில், மாற்றுக் கருத்தும் இல்லை. ஆள்வோரின் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப வருமான வரித்துறை செயல்படுகிறது. ஆள்பவர்கள் தங்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப, தங்களை எதிர்ப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் வருமான வரித்துறை பயன்படுத்துவது அந்தத் துறையை சீர்குலைப்பதாகும். தற்போதைய நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதனை பி.ஜே.பி கைவிடுவது நல்லது. மக்களை திசை திருப்ப, ஆட்சி அதிகாரத்தின் தோல்வியை மறைக்க மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

 

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நாங்கள் விமர்சிக்கவில்லை. ஆனால், அதனை வெற்றிகரமாக நடத்த பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனைத் தமிழக அரசு கைவிட வேண்டும். அச்சுறுத்தல் காரணமாக மத்திய பா.ஜனதா அரசை விமர்சிக்க முடியாத நிலையில் தமிழக அரசு உள்ளது.


பிரதமர் நரேந்திரமோடி தி.மு.க. தலைவர் கருணாநிதியைச் சந்தித்தது இயல்பான ஒன்றுதான். இதற்கும் 2ஜி அலைக்கற்றை வழக்குக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. மரியாதை நிமித்தமான சந்திப்பு என பி.ஜே.பியும், இந்தச் சந்திப்பில் எந்த அரசியலும் கிடையாது எனத் தி.மு.கவும் கூறியுள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். இருப்பினும் மோடி-கருணாநிதி சந்திப்பு தி.மு.க.வுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது. விவசாயிகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்’ என்றார்.

 

மேலும், தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி வைக்கிற கட்சிகள் யாராக இருந்தாலும் அவர்களை வீழ்த்துவதுதான் விடுதலைச் சிறுத்தைகளின் முதல் கடமை எனத் திருமாவளவன் அறிவித்துள்ளார். மோடி-கருணாநிதி சந்திப்புக்குப் பிறகு, தி.மு.க –பி.ஜே.பி கூட்டணி எனும் பேச்சுப் பரவிவரும் நிலையில் திருமாவளவன் இவ்வாறு அறிவித்திருக்கிறார்.