[ad_1]

சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதியினரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால், பாதுகாப்புக் கோரி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



நெல்லை மாவட்டம் பள்ளமடையைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ரமணஜோதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் ரமணஜோதியின் குடும்பத்தினர் இந்தத் திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இருவரின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருந்ததால், தலைமறைவாக வாழும்நிலை ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி, தமிழர் விடுதலை களம் அமைப்பின் தலைவரான முத்துக்குமார் தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில், தங்களுடைய உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் வந்த வண்ணம் இருப்பதால், உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், தங்களைப் போன்று சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையில், தனியாக போலீஸ் பிரிவை அமைத்து, பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களிடம் நெல்லை மாவட்ட டி.ஆர்.ஓ-வான முத்துராமலிங்கம், ஆர்.டி.ஓ மைதிலி ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர், இருவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.