[ad_1]
அமெரிக்காவில் இருக்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சியில் சமீபத்தில் தமிழக அரசும் பங்கெடுத்தது. அரசின் சார்பாக 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்த மகிழ்ச்சி ஒரு புறம் இருக்க, இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கும் செய்தியாக அமைந்தது, தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி தமிழாசிரியர்கள் அனைவரும் தங்களது ஒரு நாள் சம்பளத்தை ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பதற்காக தருகிறார்கள் என்ற செய்தி. இது தொடர்பாக, ஓய்வுபெற்ற தமிழ் பேராசிரியர் பேச்சிமுத்துவிடம் பேசினோம். “ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பது தொடர்பாக தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பவன் நான். பல முறை தமிழாசிரியர்களிடம் பேசும்போது உடனே பணத்தை என்னிடம் கொடுக்க வருவார்கள். வாங்கி பையில் வைத்துக்கொண்டு ரசீது கொடுக்கும் விஷயம் இல்லை இது என்றும், நேரம் வரும் அப்போது கொடுங்கள் என்றும் சொல்லிக்கொண்டே இருப்பேன்.
அதற்கான நேரம் கடந்த 29-ம் தேதி அரியலூரில் நடந்த தமிழக தமிழாசிரியர்கள் கழகத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அமைந்தது. அந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி தமிழாசிரியர்கள் அனைவரும் தங்களது ஒரு நாள் சம்பளத்தை ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைவதற்கு கொடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதனை தமிழக அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருக்கிறார்கள். இது ஒரு நல்ல தொடக்கம். அடுத்த முயற்சியாக கல்லூரி பேராசிரியர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம்” என்றார்.
சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள். அது போல, இன்று தமிழாசிரியர்கள் அனைவரும் இணைந்து ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக முயற்சி எடுக்கும்போது நாளை மாணவர்களும் அவர்களோடு கைகோப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக ஒரு நாள் சம்பளத்தை கொடுக்கும் தமிழாசிரியர்கள்.!
TAGS :
COMMENTS