[ad_1]

Tiruppur: 

திருப்பூர் அருகே நடந்த வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மரணமடைந்திருக்கிறார்கள்.


திருப்பூர் பழைய பேருந்துநிலையம் அருகே வசித்து வந்தவர் ராமநாதன். இவரது மனைவி சத்யா. இத்தம்பதியரின் மகள் துவாரகா மற்றும் மகன் மிதுன். திருப்பூரில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்த ராமநாதன், தன் உறவினர் வீட்டு துக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காக குடும்பத்துடன் காரில் மூலனூர் சென்றுகொண்டு இருந்தனர். அச்சமயம் குண்டடம் என்ற பகுதியை கடக்கும்போது, தங்களுக்கு முன்னே சென்ற வாகனத்தை மூந்திச் செல்வதற்கு முயற்சி செய்திருக்கிறார்கள். அப்போது எதிரே பழநியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த சரக்கு வேன்மீது திடீரென மோதியதில், ராமநாதனின் கார் தூக்கியெறியப்பட்டது.


இந்த கோர விபத்தில் ராமநாதனின் மனைவி சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம்பட்டு, உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்த அவரது மகள் துவாரகா மற்றும் மகன் மிதுன் ஆகியோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்துபோயினர். காரை ஓட்டிவந்த ராமநாதன் மட்டும் தலையில் பலத்த காயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ராமநாதனின் கார் மோதிய சரக்கு வேனை ஓட்டிவந்த ஜெயபால் என்பவரை பிடித்து குண்டம் பகுதி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.