[ad_1]



தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றம்செய்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 


கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ம் தேதி, முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். அவரது கொலைகுறித்து உள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததையடுத்து, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், சி.பி.சி.ஐ.டி விசாரணையிலும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. இந்த வழக்குகுறித்து இதுவரை யாரும் கைதும் செய்யப்படவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ராமஜெயத்தின் மனைவி லதா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில், ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் அவகாசம் அளித்திருந்தது. அப்போது ஆஜரான சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி., அன்பு, "குற்றவாளிகள்குறித்து துப்பு கிடைத்திருக்கிறது. எனவே, அவரக்ளைப் பிடிக்க கால அவகாசம் தேவை" எனக் கோரிக்கை விடுத்திருந்தார். அவகாசம் அளித்த நீதிமன்றம், கொலை வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சி.பி.சி.ஐ.டி எஸ்.பி., அன்பு, கொலை வழக்குத் தொடர்பாக அறிக்கை தாக்கல்செய்தார். இதைத் தொடர்ந்து, குற்றவாளிகள் தொடர்பான பயனுள்ள தகவல் கிடைத்துள்ளதாகவும், மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என்றும் எஸ்.பி., அன்பு கோரிக்கை வைத்தார். இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம், 2 மாதம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.


இந்த நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.சி.ஐ.டி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மேலும் அவகாசம் கேட்டார். அவகாசம் அளிக்க மறுத்த உயர் நீதிமன்றம், இதுவரை கொலையாளிகள் கைதுசெய்யப்படவில்லை என்று கூறி, வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றம்செய்து உத்தரவிட்டதோடு, மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.