[ad_1]







சேலத்தில் ஏ.டி.எஸ்., கொசுக்கள் அதிகமாக இருப்பதால் டெங்குக் காய்ச்சலின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. ஏ.டி.எஸ்., கொசுக்களை உணவாக உட்கொள்ளும் கம்பூசியா மீன்களை சமூக அக்கறையோடு ஒவ்வொரு மாநகராட்சிகளுக்கும் மிகக் குறைந்த விலையில் கொடுத்து வருகிறார் சேலத்தைச் சேர்ந்த ரங்கநாதன்.


இதுப்பற்றி ரங்கநாதனிடம் பேசிய போது, 'நாங்க ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிபேட்டை காவிரிக் கரை ஓரமாக சிரகோ மீன் பண்ணை வைத்திருக்கிறோம். சாப்பிடக் கூடிய மீன் வகைகளையும், அலங்கார வகை மீன்களையும் வளர்த்து வருகிறோம். இத்தோடு டெங்குக் காய்ச்சலுக்குக் காரணமான ஏ.டி.எஸ்., கொசுக்களையும், மற்ற வகை கொசுக்களையும் உணவாக உட்கொள்ளும் கம்பூசியா மீன்களையும் வளர்த்து வருகிறோம். இந்த கம்பூசியா மீன்களை மஸ்கிட்டோ ஃபிஸ் என்றும் அழைப்பர்.



கம்பூசியா மீன்களைத் தனி நபர் கேட்கும் போது ஒரு மீன் ஒரு ரூபாய்க்குக் கொடுக்கிறோம். அரசுக்கு 1,000 மீன்கள் வெறும் 50 ரூபாய்க்குக் கொடுக்கிறோம். சமீபகாலமாக டெங்கு அதிகரித்து உள்ளதால் கம்பூசியா மீன்களை அதிக அளவு கேட்கிறார்கள். சேலம் மாநகராட்சிக்கு மட்டும் 70,000-க்கும் மேற்பட்ட மீன்களும், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான மீன்களையும் கொடுத்திருக்கிறோம்.


இந்த மீன்கள் முழுக்க முழுக்க கொசுக்களையும், கொசு முட்டைகளையும், அதன் லார்வாக்களையும் மட்டுமே உண்டு வாழக்கூடியவை. இந்த மீன்களை வாங்கிச் சென்று நீர்தேங்கியிருக்கும் இடத்தில் விட்டால், அந்தத் தண்ணீரில் உள்ள கொசுக்கள், லார்வாக்கள், முட்டைகளைச் சாப்பிட்டுவிடும். இதனால் கொசு உற்பத்தி இல்லாமல் தடுக்கிறது. கொசுவால் உண்டாகும் நோய்களும் இதனால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் கம்பூசியா மீன்களை நாங்கள் அதிகளவு வளர்த்து வருகிறோம். தனி நபர்கள் அழகு மீன்களின் உணவுக்காக இந்த கம்பூசியா மீன்களை வாங்கிச் செல்லுகிறார்கள். அவர்களுக்குச் சமீபகாலமாக கம்பூசியா மீன்களைக் கொடுப்பதை நிறுத்திவிட்டு கொசு ஒழிப்பதற்காக மட்டுமே அதிகளவு கம்பூசியா மீன்களைக் கொடுத்து வருகிறோம்' என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்