[ad_1]

Chennai: ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கின் தீர்ப்பு எப்போது வெளியாகும் என்று  நாடே எதிர்பார்த்துக்கொண்டிருக்க, சி.பி.ஐ. நீதிமன்றம் நாளை அந்த தேதியை அறிவிக்கவுள்ளது. 

அ.தி.மு.க-வின் எதிர்காலத்துடன் தொடர்புடைய ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கைப் போன்று, தி.மு.க-வின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடியதாக 2ஜி வழக்கின் தீர்ப்பு அமையும் என அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.




தமிழகத்தில் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகப் பல்வேறு தரப்பினரும் கருதும் இவ்வேளையில், தமிழக மக்கள் மத்தியில் மட்டுமல்லாது இதர அரசியல் கட்சிகளின் தலைவர்களிடையேயும் 2ஜி வழக்கின் தீர்ப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம்.

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தி.மு.க. அங்கம் வகித்தது. அந்தத் தேர்தலில் நாடு முழுவதும் நரேந்திர மோடி தலைமையில் பி.ஜே.பி. மகத்தான வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியமைத்தது. நாடாளுமன்றத் தேர்தலின்போது, தமிழகத்தில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது. எனினும் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில் இரு கட்சிகளும் ஓரிடத்தில்கூட வெற்றிபெற முடியாமல் போனது. அதற்குக் காரணம், 2ஜி ஊழல் வழக்குதான் என்று பரவலான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. 

அப்போது ஜெயலலிதா தலைமையில் தனித்துப் போட்டியிட்ட அ.தி.மு.க, தமிழகத்தில் 37 மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதையடுத்து கடந்த ஆண்டு (2016) நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலிலும், அ.தி.மு.க-வே வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தது. ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களில், அ.தி.மு.க. இரண்டு அணிகளாகப் பிரிந்து தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. எனினும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க அரசு தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது.

மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசு, தமிழக அரசை இயக்கி வருவதாகவும், பிரதமர் மோடிக்கு அடிபணிந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் செயல்படுவதாகவும் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வரும் நிலையில், தற்போது 2ஜி வழக்கில் தி.மு.க-வுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டால், 'தமிழகத்தில் திராவிடக்கட்சிகள் இல்லாத ஆட்சியை அமைப்போம்' என்று தொடர்ந்து கூறிவரும் பி.ஜே.பி. உள்ளிட்ட இதரக் கட்சிகள் உற்சாகம் அடையக்கூடும். 2ஜி வழக்கில் தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிராகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில், சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட்டு வரும் 2ஜி வழக்கின் தீர்ப்பு என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்; அதற்கு முன் எப்போது தீர்ப்பு வெளியாகும் என்ற அறிவிப்பு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) வெளியாகிறது. இதன் முன்னோட்டமாகவோ, என்னவோ, சென்னைக்கு ஒருநாள் பயணமாக வந்த பிரதமர் மோடி, தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரின் கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார். 


இந்நிலையில், தற்போது 2ஜி வழக்கின் தீர்ப்புத் தேதி வெளியான பின்னரே, தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.