[ad_1]
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள பூக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் வீடுகட்டுவதற்காகத் தண்ணீர் சேமித்து வைத்திருந்த குழியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது பூக்குளம் கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள கோகுலம் நகரில் வசித்து வருபவர் வெள்ளிமலை. இவரது வீட்டின் அருகில் வசித்துவருபவர் மலைமேகம். வெள்ளிமலையின் மகள் அனுசியா (8), இங்குள்ள அரசுப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். மலைமேகத்தின் மகள் வர்ஷினி (6). இவரும் அதே பள்ளியில் முதல் வகுப்பில் படித்து வந்தார்.
வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை அனுசியாவும் வர்ஷினியும் நேற்று மாலை முதல் காணாமல் போயினர். இதையடுத்து குழந்தைகளின் பெற்றோர் மற்றும் கிராமத்தினர் காணாமல்போன இரு குழந்தைகளையும் நேற்று இரவு முழுவதும் தேடி வந்தனர். மேலும் இது தொடர்பாக இளம்செம்பூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை வெள்ளிமலையின் வீட்டின் பின்புறம் பஞ்சவர்ணம் என்பவர் புதிதாகக் கட்டி வரும் வீட்டின் கட்டுமான பணிகளுக்காக குழி வெட்டி அதில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் குழியில் இரு குழந்தைகளின் உடலும் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அக்குழந்தைகளின் உடல் மீட்கப்பட்டது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த இளம்செம்பூர் போலீஸார், குழந்தைகளின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். நேற்று மாலை வரை பூக்குளம் கிராமத்தில் ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்த இரு குழந்தைகளும் ஒரே நேரத்தில் உயிரிழந்த நிகழ்வு அக்கிராமத்தினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
வீடுகட்ட சேமித்து வைத்திருந்த தண்ணீர் குழியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு
TAGS :
COMMENTS