[ad_1]

Chennai: 

தமிழகத்தில், 2 யூனிட் மணலின் விலை ஒரு லட்சத்துக்கு விற்கப்படும் நிலை உருவாகியுள்ளது. மணல் தட்டுப்பாட்டைத் தவிர்க்க, கூடுதலாக 70 குவாரிகளைத் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவுசெய்துள்ளார். 


கட்டடப் பணிகளுக்குத் தேவையான மணல் கிடைக்காமல் திண்டாடும் சூழ்நிலை தமிழகத்தில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திலிருந்து கேரளாவுக்கும் கர்நாடகாவுக்கும் மணல் சப்ளை செய்யப்பட்டன. மணல் தொழிலில் கொடிகட்டிப்பறந்த சேகர்ரெட்டி வீடு, அலுவலகங்களில் சோதனை நடந்த பிறகு, அரசே நேரடியாக மணல் விற்பனையில் ஈடுபட்டது. இதற்கான ஆன்லைன் முன்பதிவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். தற்போது, ஆன் லைன் மூலம் மணல் பிசினஸ் நடப்பதாக அரசு அறிவித்தாலும் திரைமறைவில் ஆளுங்கட்சியினரின் தில்லாலங்கடி வேலைகள் இன்னமும் தொடர்கின்றன. 
 
 மணல் தேவையுள்ளோர் ஆன்-லைனில் முன்பதிவு செய்தால், 40 நாள்களுக்குப் பிறகே அவர்களுக்கு மணல் சப்ளை செய்யப்படுகிறது. இதுவே, மணல் விலை கிடுகிடுவென உயரக் காரணம். மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டடப்பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அதை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மணல் தேவையைச் சமாளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் 70 குவாரிகளைத் திறக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் செல்ல ராசாமணி, "தமிழகத்தில் கடலூர், நாகப்பட்டினம், விழுப்புரம், வேலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 8 மணல் குவாரிகள் செயல்படுகின்றன. இந்தக் குவாரிகளிலிருந்து தினமும் அள்ளப்படும் மணலால், கட்டடப் பணிகளுக்கான தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியவில்லை.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த சமயத்தில், தினமும் 20 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் லோடு மணல் அள்ளப்பட்டது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது, 25 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் லோடு மணல் தினமும் அள்ளப்பட்டது. அப்போது, கர்நாடகாவுக்கும், கேரளாவுக்கும் மணல் சப்ளைசெய்யப்பட்டது. ஒரு லாரி மணல் (2 யூனிட்) விலை 10 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. மணல் தேவைக்கு ஏற்ப விலையிலும் மாற்றம் ஏற்பட்டது. 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 80 ஆயிரம் வரை ஒரு லோடு மணல் விற்கப்பட்டது.

சேகர் ரெட்டியிடம் நடந்த வருமான வரித்துறை சோதனைக்குப் பிறகு, தினமும் 2,000 லோடு மணல் மட்டுமே அள்ளப்படுகிறது. தற்போது, 2 யூனிட் மணல் ஒரு லட்சம் வரை விற்கப்படுகிறது. இது, கட்டடப்பணிகளைப் பெரிதும் பாதிக்கவைத்துள்ளது. எம்.சான்ட் மூலம் கட்டடப்பணிகள் நடந்துவந்தாலும், மணல் தேவை இருப்பதால் கூடுதல் விலைக்கு அதை வாங்கவேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், புதிய வீட்டின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

ஆன்-லைன் மூலம் மணல் விற்கப்படுவதால், அரசுக்கு ஓரளவு வருவாய் கிடைத்துவருகிறது. கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், செகண்ட் சேல்ஸ் மூலம் மணல் விற்பனை நடந்ததால், வருவாய் தனிநபர் பாக்கெட்டுக்குச் சென்றது. தற்போது, அரசே மணல் விற்பனைசெய்தாலும் லிஃப்டிங் பணிகள் தனியார் மூலமே நடக்கிறது. இது, மணல் பிசினஸை மீண்டும் தனியார் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வழிவகுக்கிறது. தமிழகத்தில், மணல் குவாரிகள் செயல்படும் 8 மாவட்டங்களில் உள்ள ஆளுங்கட்சியினரும், முதல்வர், துணை முதல்வர் தரப்பில் செல்வாக்குள்ளவர்களும் திருட்டு மணல் பிசினஸில் கொடிக்கட்டிப் பறக்கின்றனர்.

ஆன் லைனில் முன்பதிவு செய்யப்படாத லாரிகளுக்கும் ஆளுங்கட்சியினரின் தலையீட்டால் மணல் அள்ளப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அதை பொதுப்பணித்துறையினரால் தடுக்க முடியவில்லை. மணல் தேவையைக் கருத்தில்கொண்டு, 70 குவாரிகளைத் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். தற்போது, திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில்தான் மணல் இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் மணல் அள்ளுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. காவிரியில் மணல் அள்ள உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடைவிதித்துள்ளதால், அங்கு புதியதாக மணல் குவாரிகளை அமைக்க வாய்ப்பில்லை.

அரசு மணல் குவாரிகளில் ஒரு யூனிட் மணல் 540 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், குவாரிகளிலிருந்து மணலை ஏற்றிவரும் லாரிகளிடமிருந்து தடவரி, கோயில் வரி, திருப்பணி நன்கொடை என அடாவடியாகப் பணம் வசூலிக்கப்படுகிறது. இந்த வகையில், ஒரு லாரிக்கு ஆயிரக்கணக்கில் செலவாகுகிறது. அடுத்து, டீசல், டிரைவர் சம்பளம், வாடகை, டோல்கெட், ஆளுங்கட்சியினர் கவனிப்பு, போலீஸாருக்கு மாமூல் ஆகியவற்றால் மணல் விலை உயர்கிறது. கூடுதலாக மணல் குவாரிகள் திறக்கப்படும்போது, மணல் விலை குறைய வாய்ப்புள்ளது" என்றார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரைபாடி டிப்பர் லாரி உரிமையாளர்கள் நலச்சங்க பொதுச் செயலாளர், சட்டப் பொறியாளர் எஸ்.எஸ். பாலாஜி கூறுகையில், "கடந்த 1.7.17 முதல் தமிழக அரசின் பொதுப்பணித்துறைமூலம் ஆன்லைனில் மணல் விற்பனை செய்துவருகிறது. மணல் குவாரிகளால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், மணல் குவாரிகள் மூன்று ஆண்டுகளுக்குள் மூடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். ஆனால் தற்போது, கூடுதலாக 70 மணல் குவாரிகளைத் திறப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் மணலுக்கென்று புதிய கொள்கை அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் அதுபோன்ற எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதுவே, மணல் விலை உயரவும் தட்டுப்பாட்டிற்கும் காரணமாக இருக்கிறது. மணல் விலை உயர்வால் கட்டடப்பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மட்டுமே தினமும் 7,000 லோடு மணல் தேவை உள்ளது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில், ஆயிரம் லோடு மணல்கூட கிடைப்பதில்லை. எம்.சாண்ட் உற்பத்தியிலும் அரசு எந்தவித அக்கறையும் செலுத்துவதில்லை. எம்.சாண்ட் உற்பத்தியை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கூடுதலாக மணல் குவாரிகள் திறக்கப்படும் அறிவிப்பால், மணல் விலை குறையும் என்று மக்கள் எதிர்பார்ப்பதுண்டு. ஆனால், அதற்கான வாய்ப்புகள் குறைவு. மேலும், புதிய மணல் குவாரிகளிலிருந்து கிடைக்கப்பெறும் மணலின் தரம்குறித்து விளக்கம் வேண்டும். ஏனெனில் தரம் குறைந்த மணல் விற்பனை செய்யப்படுகின்றது. மணல் பிசினஸில் தமிழக அரசு அக்கறைசெலுத்தவில்லை என்றால், அது மீண்டும் விதிமுறை மீறல்களுக்கு வழிவகுக்கும்" என்றார். 


இதுகுறித்து பொதுப்பணித்துறை வட்டாரத்தில் கேட்டபோது, "அரசே மணல் குவாரிகளை நடத்திவருவதால், முறைகேடுகள் நடப்பது குறைந்துவிட்டது. மணல் தேவையைக் கருத்தில்கொண்டு கூடுதலாக 70 குவாரிகள் திறக்கப்படுகின்றன. முறைகேடுகுறித்து ஆதாரத்துடன் புகார் அளித்தால், சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். மணல் விலை உயர்வுகுறித்தும் ஆலோசிக்கப்பட்டுவருகிறது" என்றனர்.
 

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");