[ad_1]

'2019-ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது, ஜி.எஸ்.டி வரியை 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாகக் குறைப்போம்' என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.




குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் இன்று பிரசாரத்தைத் துவங்கினார். குஜராத் காந்தி நகரில் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, ஜி.எஸ்.டி. வரி சரிவர அமல்படுத்தப்படவில்லை என்று சரமாரியாக விமர்சித்தார்.

“ஜி.எஸ்.டி வரி பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. கப்பர் சிங் வரியான ஜி.எஸ்.டி ஒழிக்கப்பட வேண்டும். ஒரே ஒரு விகிதத்தின் கீழ் வரி வசூலிக்கப்பட வேண்டும். வரி விகிதத்தை 18 சதவிகிதமாக நிர்ணயிக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. பா.ஜ.க இதைச் செய்யத் தவறினால், 2019-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் இதை நிறைவேற்றும்” என்றார் ராகுல் காந்தி.

நேற்று நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், 200-க்கும் மேற்பட்ட பொருள்கள் மீதான வரி குறைக்கப்பட்டது. எனினும் இதில் காங்கிரஸ் திருப்தி அடையவில்லை என்பதையே ராகுல் காந்தியின் பேச்சு வெளிப்படுத்துவதாக உள்ளது.