[ad_1]

சேரியில் பிறந்து, படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி, வீட்டு வேலைக்குச் சென்ற ஒரு சிறுமி, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் கம்பீரமாகப் பேசினார் என்றால் நம்பமுடிகிறதா. அவர் பெயரைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு, 17 வருடங்கள் பின்னோக்கிச் செல்வோம்.



பெங்களூருவின் ஒரு சேரிப் பகுதி. எந்த வேலையும் செய்ய முடியாமல், வீட்டோடு முடங்கிக் கிடந்த ஓர் ஆணும் வீடுகளில் பணி செய்யும் ஒரு பெண்ணும் திருமணம் செய்துகொள்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அம்மாவுக்குத் தன் குழந்தையை நிறையப் படிக்கவைக்க ஆசை. வீட்டு வேலை செய்து, தான் சம்பாதிக்கும் சொற்ப பணத்திலேயே மாற்றுத்திறனாளி கணவனையும் கவனித்துக்கொண்டு, மகளையும் படிக்கவைக்கிறார். ஆனால், எளியவர்களின் கனவோடுதானே காலம் விளையாடும்.

அந்த அம்மாவைப் புற்றுநோய் தேடிவந்து பிடித்துக்கொள்கிறது. அந்த நிலையிலும் வேலைக்குச் சென்று உழைக்கிறார். நோய் முற்றி இனி முடியாது என்ற நிலையில் குடிசைக்குள் முடங்கிவிடுகிறார். இப்போது, அப்பா மற்றும் அம்மா இருவரையும் சுமக்கும் பொறுப்பு, அந்த நான்காம் வகுப்புப் படிக்கும் குழந்தையின் கையில் விழுகிறது. அம்மா செய்த வீட்டு வேலைக்குப் போகிறாள். அந்தப் பிஞ்சுக்கைகள் பல வீடுகளைப் பெருக்குகிறது, தன் வீட்டில் விளக்கு எரிய. பாத்திரங்கள் தேய்க்கிறது, தன் பெற்றோர்கள் வயிறு நிறைய.

சில மாதங்களில் புற்றுநோய், அந்தச் சிறுமியின் அம்மாவை உலகத்தைவிட்டு அழைத்துச் சென்றுவிடுகிறது. தந்தையால் அழுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாத நிலை. சிறுமியின் நிலையைப் புரிந்துகொண்ட சொந்தக்காரர்கள், அவளை தங்களுடன் அழைத்துச் செல்கிறார்கள். படிக்கவைக்க அல்ல; கல்யாண மண்டபங்களில் எடுபிடி வேலை செய்ய. அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியாமல் கல்யாண மண்டபத்தின் பெரிய பெரிய கரி பாத்திரங்களுடன் வாழ ஆரம்பிக்கிறாள் அந்தச் சிறுமி.

இப்படியே வருடங்கள் ஓடுகின்றன. 2011-ம் ஆண்டு ஒரு தன்னார்வ அமைப்பினால், சிறுமி மீட்கப்படுகிறாள். அவள் அம்மாவின் ஆசைப்படியே படிக்க ஆரம்பிக்கிறாள். பத்தாம் வகுப்பில் 80 சதவிகிதம் மதிப்பெண் எடுக்கிறாள். தற்போது, 'கர்நாடகா ப்ரீ யூனிவர்சிட்டி'யில் முதலாம் ஆண்டு பட்டப் படிப்பு படிக்கிறாள்.

சரி, நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு இந்த இளம் பெண்ணுக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது?

";என் பெயர் கனகா. நம்ம நாட்டில் குழந்தைகள் உரிமைக்காக, பாதுகாப்புக்காக நிறைய சட்டங்கள் இருக்குதான். ஆனா, அதன்மூலம் சிட்டியில் இருக்கிற பிள்ளைகளைத்தான் காப்பாத்த முடியுது. என்னை மாதிரி சேரியில், கிராமங்களில் இருக்கிற குழந்தைத் தொழிலாளர்களின் நிலை மாறலை. நான் என் சொந்தக்காரர்களோடு கல்யாண மண்டபத்தில் வேலைப் பார்த்த சமயங்களில் என்கிட்ட பலமுறை தப்பா நடந்துக்கிட்டாங்க. அதனால்தான், குழந்தைகள் உரிமைக்காக நாடாளுமன்றத்தில் பேசலாம்னு கேள்விப்பட்டு முயற்சி எடுத்தேன். என் மாநிலத்திலிருந்தே நூற்றுக்கணக்கானவர்கள் இதுக்காக கலந்துக்கிட்டாங்க. மூன்று சுற்றின் முடிவில் நான் செலக்ட் ஆனேன்'' என்கிறார் கனகா.



இவருடன் சேர்த்து 30 மாணவிகள் நவம்பர் 20-ம் தேதி குழந்தைகள் உரிமைக்காக நாடாளுமன்றத்தில் பேசினார்கள்.

''என் அம்மா ஆசைப்பட்ட மாதிரியே நான் இப்போ படிச்சுட்டிருக்கேன். விஞ்ஞானி ஆகணும்னு ஆசைப்படறேன். இந்தச் சந்தோஷமான விஷயத்தை அவங்களுக்கு எப்படி சொல்றதுன்னுதான் தெரியலை"; என்கிற அந்த 17 வயதுக் குழந்தையின் வருத்தமான குரல் நம் மனதைப் பிசைகிறது.