[ad_1]

கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளருக்கு15 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதித்து பண்ருட்டி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியிருக்கிறது.
கடந்த 1998 -1999-ல், கடலூர் மாவட்டம் கீழ்கவரப்பட்டு கிராமத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிச் செயலாளராக பணிபுரிந்தவர் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த மூர்த்தி. அப்போது, நிரந்தர வைப்பு ரசீதுகள் மற்றும் பற்றுச் சீட்டுகள் இல்லாமல் நிரந்தர வைப்புக் கடன்கள் என்று பொய் கணக்கு எழுதி ரொக்க இருப்பை கையாடல் செய்ததாக இவர் மீது, அப்போதைய துணைப்பதிவாளர் நடராஜன் என்பவரால் புகார் கொடுக்கப்பட்டது. இப்புகாரை விசாரணை செய்த கடலூர் மாவட்ட வணிக குற்ற புலனாய்வு பிரிவு போலிஸார், மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். 
இது நீண்டகால வழக்காக இருப்பதால், வணிக குற்ற புலனாய்வுதுறை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமாரி மற்றும் விழுப்புரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் எழிலரசு ஆகியோர் வழக்கை விரைந்து முடிக்கும்படி நீதிமன்றத்துகு வேண்டுகோள் வைத்தனர். அதன்படி, இவ்வழக்கை விசாரித்து வந்த பண்ருட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கணேஷ் இன்று, குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கூட்டுறவு செயலாளர் மூர்த்திக்கு 15 வருடம் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, இதை அவர் ஏக காலத்துக்கும் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.