[ad_1]

மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கைக் கடற்படையினர் இன்று சிறை பிடித்துச் சென்றனர். 
பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துச் செல்லும் நடவடிக்கை அன்றாடம் தொடர்ந்து நடந்துவருகின்றன. கடந்த வாரம் வரை 54 மீனவர்கள் இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 140-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இலங்கை அரசால் பிடித்து வைக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கடந்த 2 நாள்களுக்கு முன் முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.




இந்நிலையில், நேற்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்கள், அவர்களது இரு விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களையும் அவர்களது ஒரு படகினையும் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர். இந்த விசாரணைக்குப் பின் தமிழக மீனவர்களுக்கு மலேரியா தொற்று குறித்த சோதனை மேற்கொண்டு பின்னர் யாழ்ப்பாணம் நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர்.


இலங்கை கடல் பகுதியில் உருவாகியுள்ள புயல் சின்னத்தின் விளைவாக அங்கு காற்று அதிகமாக வீசி வருகிறது. இதனால் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் காற்றின் வேகத்தினால் எல்லை தாண்டிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொள்ளாமல் புயல் காலங்களிலும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வருவதாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் செல்லும் செயலால் தமிழக மீனவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.