[ad_1]

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் சகோதரரின் 101-வது பிறந்த நாள் விழா எளிமையான முறையில் கொண்டாடபட்டது.  மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் உடன் பிறந்த அண்ணன் முத்து முகம்மது மீரா மரைக்காயர் ராமேஸ்வரத்தில் வசித்து வருகிறார். மறைந்த கலாம் தனது அண்ணன் மீது அதிக பாசம் கொண்டவர். அதன் விளைவாக தனது அண்ணன் மரைக்காயரின் 100-வது பிறந்த தினத்தை மிக சிறப்பாக கொண்டாட வேண்டும் என நினைத்திருந்தார். இந்த பிறந்த நாளில் அவருக்கு பரிசளிப்பதற்காக வாசனை திரவியங்கள் அடங்கிய சந்தனை பேழை ஒன்றையும் நீண்ட காலமாக பாதுகாத்து வந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக கலாம் மறைந்ததால் அவரது ஆசை நிறைவேறாமல் போனது.
இந்நிலையில் மறைந்த கலாமின் விருப்பபடி அவரது சகோதரர் முத்து முகம்மது மீரா மரைக்காயரின் 100-வது பிறந்த நாள் விழா கடந்த ஆண்டு மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலாம் தனது அண்ணனுக்காக பாதுகாத்து வைத்திருந்த வாசனை திரவியங்கள் கொண்ட சந்தனப் பேழை அவரிடம் வழங்கப்பட்டது.
கலாம் எண்ணத்தை நிறைவேற்றுவதற்காக கடந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட்ட அவரது சகோதரரின் பிறந்த நாள் விழா இந்த ஆண்டு மிக எளிமையாக கொண்டாடப்பட்டது. மரைக்காயரின் 101-வது பிறந்த தினமான இன்று அவரது இல்லமான ஹவுஸ் ஆப் கலாமில் உறவினர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார் கலாமின் சகோதரர். இதனைத் தொடர்ந்து சிறப்பு தொழுகையும் செய்தனர். இந்நிகழ்வில் மரைக்காயரின் மகன் ஜெயினுலாபுதீன், மகள் நசீமா மரைக்காயர், பேரன்கள் சேக், சலீம் மற்றும் உறவினர்கள் பங்கேற்று மரைக்காயரிடம் ஆசி பெற்றனர்.