[ad_1]
இன்றைக்கு தேசியப் பத்திரிகையாளர் நாள். ஐக்கிய நாடுகள் சபையால், உலகின் மிகவும் ஆபத்தான பணிகளில் ஒன்றாக ‘அங்கீகரிக்கப்பட்ட’ பத்திரிகைத் துறை ஆண்களுக்கானது என்று ஸ்டீரியோடைப் செய்யப்பட்ட துறை. ஆனால், போர்க்களங்களுக்கும் கலவரங்களுக்கும் இடையில் துணிச்சலாக நின்று செய்திகளைச் சேகரித்து, உலகறிய செய்த எண்ணற்ற பெண் செய்தியாளர்களும் இங்கு இருக்கிறார்கள். அவர்களுள் டாப் 10 பெண் பத்திரிகையாளர்களைப் பற்றிய சிறப்புப் பகிர்வுதான் இது.
அனிதா பிரதாப்
கேரள மாநிலம் கோட்டயத்தில் பிறந்து தந்தையின் பணி மாறுதல்களால் இந்தியா முழுவதும் சுற்றிச் சுற்றி பள்ளிப் படிப்பை முடித்து, டெல்லி மிராண்டா ஹவுசில் இளங்கலை ஆங்கிலம், பெங்களூரில் இதழியல் பட்டயப்படிப்பை முடித்ததும், இந்தியன் எக்ஸ்பிரஸில் தன்னுடைய இதழியல் பயணத்தைத் தொடங்கியவர், டைம், சிஎன்என் உள்ளிட்ட தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களில் வேலை பார்த்தவர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துப் பேட்டி கண்ட முதல் பத்திரிகையாளர் இவரே. “இந்த உலகம் பார்த்த மிக முக்கியமான தலைவர் பிரபாகரன்” என்று இன்று வரை அந்தச் சந்திப்பை நினைவு கூர்கிறார். ஈழத்தில் இந்திய அமைதிப்படை செய்த கொடுமைகளை எழுதியதற்காக மிகவும் பேசப்பட்டவர். பல்வேறு போர்க்களங்களில் நின்று செய்திகளை வழங்கியதற்காக சிறந்த பத்திரிகையாளருக்கான பல்வேறு விருதுகளை வாங்கியவர்.
கௌரி லங்கேஷ்
கௌரியின் தந்தை பி. லங்கேஷ் கவிஞர் மற்றும் பத்திரிகையாளர். 16 வருடங்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு ஆங்கில ஊடகங்களில் பணியாற்றிவர். பிறகு, கெளரியின் தந்தை நடத்தி வந்த லங்கேஷ் பத்திரிகையை எடுத்து நடத்த ஆரம்பித்தார். கர்நாடகாவில் வலதுசாரிகளுடைய வளர்ச்சி அதிகரித்ததும் “கர்நாடகாவையும் குஜராத்தாக மாற்றுவோம்” என்கிற முழக்கம்தான், ஆங்கில ஊடகங்களில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த கௌரிக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியதாம். கௌரி தொடர்ந்து வலதுசாரி இந்துத்துவத்திற்கு எதிராக எழுதி வந்தார். கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி மர்ம நபர்களால் கௌரி சுட்டுக்கொல்லப்பட்டார். இவருடைய தொடர் பணிக்காக இந்த ஆண்டின் Anna Politkovskaya விருது வழங்கப்பட்டது.
அருந்ததி ராய்
ஷில்லாங்கில் பிறந்து தாய் தந்தை பிரிவிற்குப் பிறகு கேரளாவில் வளர்ந்தவர் அருந்ததி ராய். இடதுசாரி சிந்தனையுடைய அருந்ததி ராய் இந்தியா முழுவதும் தொலைக்காட்சி, பத்திரிகைகள் என்று பல்வேறு ஊடகங்களில் வேலை பார்த்தவர். 1997 இல் இவர் வெளியிட்ட The God of Small Things புத்தகம் புக்கர் விருது வாங்கியது. மேலும், நியூயார்க் டைம்ஸிலும் அந்த ஆண்டு வெளியான மிகவும் முக்கியமான புத்தகங்களில் ஒன்றாக The God of Small Things குறிப்பிடப்பட்டது. இந்த ஆண்டு அவர் வெளியிட்டிருக்கும் The Ministry of Utmost Happiness புத்தகமும் புக்கர் விருதுக்குத் தேர்வாகியிருக்கிறது. அருந்ததி ராயுடைய துணிச்சலான அறிக்கைகள் பல நேரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. பழங்குடி மக்களின் உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பவர். 'ஆப்ரேஷன் க்ரீன் ஹண்ட்' என்கிற பெயரில் இந்திய துணை ராணுவப்படை நடத்திய தாக்குதலை, “இந்தியாவின் ஏழ்மையிலும் ஏழ்மையானவர்களின் மீதான தாக்குதல்” என்று கூறியவர். மேலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக உலகம் முழுவதும் நடைபெறும் தாக்குதல்கள்மீதும், போர்மீதும் கடுமையான விமர்சனம் உடையவர்.
ரானா அயூப்
ஜம்மு காஷ்மீரில் பிறந்த ரானா அயூப் டெல்லியில் தனது முதுகலைப் படிப்பை முடித்துவிட்டு, ’தெஹல்கா’ என்கிற பத்திரிகையில் வேலை பார்த்து வந்தார். பின்னர், அதிலிருந்து விலகி, தற்போது பத்திரிகை உலகில் தனித்து இயங்கி வருகிறார். குஜராத்தில் நடைபெற்ற பொய் என்கவுன்டர்கள் குறித்து இவர் எழுதிய கட்டுரை, அவுட் லுக் வெளியிட்ட உலகின் டாப் 20 கட்டுரைகளில் ஒன்றாக இடம் பெற்றது. மேலும், குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் குறித்து இவர் ஆராய்ந்து எழுதிய Gujarat Files: Anatomy of a Cover Up என்கிற புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னுடைய பெயர் மைதிலி த்யாகி என்றும், தான் ஆர்எஸ்எஸ் இல் மிகுந்த பற்று உடையவர் என்றும் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, மறைத்து வைத்திருந்த ரெக்கார்டரில், குஜராத்தின் உயர் அதிகாரிகளிடம் துணிச்சலாக இவர் செய்த இந்த மறைமுக ஆய்வு பெரிய அளவில் பாராட்டப்பட்டு விருதுகளைப் பெற்றுத்தந்தது.
சோமா பாசு
அலகாபாத்தில் பிறந்து வளர்ந்த சோமா பாசு, டெக்கான் க்ரானிக்கல் மற்றும் ஸ்டேட்ஸ்மேன் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளில் வேலை பார்த்தவர். 'யூத் கி அவாஸ்' என்கிற இணையதளத்தில் இவர் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, மனித தோல் கடத்தல் குறித்து இவர் எழுதிய கட்டுரை பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. மும்பையில் வாழும் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் நேபாளத்தில் வாழும் பெண்களுடைய தோல் எப்படிக் கடத்தப்படுகிறது என்பது குறித்து இவர் எழுதிய விரிவான கட்டுரைக்காக Kurt Schork Memorial Award பெற்றவர். தன்னுடைய நண்பர் ஒருவருக்குத் தோல் தேவைப்படுகிறது என்று பொய் ஆவணங்களுடன் களத்தில் நேரடியாக இறங்கி, இந்திய அளவில் தோல் கடத்தல் குறித்து முதன் முதலில் விரிவாக கள ஆய்வு செய்தவர் இவரே!
ரேவதி லால்
ஹரியானாவைச் சேர்ந்த ரேவதி லால், NDTV இல் பத்து வருடங்களாக வேலைப் பார்த்தவர். பதினாறு வருடங்களாக ஆவணப்படம், பத்திரிகைத் துறையில் இயங்கி வருபவர். குஜராத் கலவரத்திற்கு பிறகான குஜராத்தின் நிலை குறித்த இவருடைய செய்தி சேகரிப்புப் பணி என்பது மிகவும் குறிப்பிட வேண்டியது. NDTV யில் தன்னுடைய உயரிய பொறுப்பை விட்டுவிட்டு ’டெஹல்கா’ வில் இணைந்தார். ஆதரவற்ற குழந்தைகளுக்காக என்ஜிஓ ஒன்றையும் நடத்தி வருகிறார் ரேவதி.
ப்ரியம்வதா
சென்னையைச் சேர்ந்த ப்ரியம்வதா நியூஸ் எக்ஸில் இணை ஆசிரியராக வேலைப் பார்த்தவர். தற்போது இந்தியா டுடேயில் வேலை பார்த்து வருகிறார். ஈழ இனப்படுகொலையின் சுவடுகளைப் பற்றி, ஈழத்தின் வடகிழக்குப் பகுதியில் கள ஆய்வு செய்து ஹெட் லைன்ஸ் டுடேவுக்காக 2011-ல் இவர் எடுத்த 'I Witnessed Genocide' என்ற ஆவணப்படம் பல விருதுகளை வாங்கியது. அந்த ஆவணப்படத்தை எடுக்கப் போவதாக தான் கிளம்புவதற்கு ஐந்து மணி நேரத்துக்கு முன்னர்தான் தன் அப்பா, சகோதரனிடம் தெரிவித்தாராம். 'நான் உன்னைச் சகோதரியாக இனி ஏற்க மாட்டேன்' என்று அவர் சகோதரர் மிரட்டியும், தந்தை அழுதும் கேட்காமல் கள ஆய்வைத் தொடர்ந்தவர். இலங்கை அரசின் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் அந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார் ப்ரியம்வதா
ஷஹானா பட்
காஷ்மீரியிலேயே பிறந்து வளர்ந்த ஷஹானா, மக்கள் தொடர்பியல் மற்றும் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். Press TV என்கிற சர்வதேச ஊடகம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அரை விதவைகள், காஷ்மீரில் நடக்கும் அத்து மீறல்கள் உள்ளிட்ட காஷ்மீரில் வாழும் மக்களின் உணர்வுகளைத் தொடர்ந்து அழுத்தமாகப் பதிவு செய்து வருபவர். காஷ்மீரின் முன்னணி அரசியல் தலைவரான கிலானியை நேர்காணல் செய்திருக்கிறார். 2014 ஆம் ஆண்டு காஷ்மீரில் வந்த வரலாறு காணாத வெள்ளம், ஊடகங்களின் கண்களில் படாமல் போக, அந்த நேரத்தில் இவர் செய்த செய்தி சேகரிப்புப் பணி மிகவும் குறிப்பிடப்பட வேண்டியது. காஷ்மீரில் இருக்கும் நெருக்கடிகளும், மக்களுக்கு ஊடகங்கள் மேல் குறைந்து போன நம்பிக்கையும்தான், தான் சந்திக்கும் கடுமையான சவால்கள் என்கிறார் இவர்!
தெரேசா ரெஹ்மான்
ஷில்லாங்கில் பிறந்து, டெல்லியில் இதழியல் படித்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பி தன்னுடைய பணியைச் செய்து வருகிறார். வட கிழக்கில் இருக்கும் 8 மாநிலங்களுடைய பிரச்னைகள் குறித்துத் தொடர்ந்து எழுதி வருபவர். The Thumb Print என்கிற சர்வதேசப் பத்திரிகையைத் தொடங்கி நடத்தி வருகிறார். மணிப்பூர் பெண்கள் பாதுகாப்புப் படையால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டது குறித்து இவர் எழுதிய எழுத்துகள் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. தன்னுடைய பத்திரிகைப் பணிக்காக இரண்டு முறை Excellence in Journalism விருதினை வாங்கியிருக்கிறார். The Mothers of Manipur: Twelve Women Who Made History என்ற இவரது புத்தகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வடகிழக்கு மாநிலங்களில் எய்ட்ஸ் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்களுடைய வாழ்க்கையைப் பற்றியும் தொடர்ந்து எழுதி வருகிறார்.
மமாங் டாய்
அருணாச்சலப் பிரதேசம் இட்டாநகரில் பிறந்து வளர்ந்த மமாங், ஹிந்துஸ்தான் டைம்ஸ், த டெலிகிராஃப் உள்ளிட்ட புகழ்பெற்ற பத்திரிகைகளில் வேலை பார்த்தவர். ஆல் இந்தியா ரேடியோவிலும் சில நாள் வேலை பார்த்தார். வடகிழக்கு மக்களுடைய வாழ்க்கையைப் பற்றி தொடர்ந்து எழுதி வருபவர். இவருடைய கவிதைகளும், நாவல்களும் இவர் பிறந்து வளர்ந்த மண் சார்ந்தவை. ஆதிவாசிகள் குறித்து இவர் எழுதிய The Legends of Pensam என்கிற புத்தகம், ஆதிவாசிகள் குறித்து இதுவரை தெரியாத பல தகவல்களைக் கொண்டிருந்தது. இலக்கியத்தில் இவருடைய பங்களிப்பிற்காக 2011 ஆம் ஆண்டு இவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
அனிதா பிரதாப், கெளரி லங்கேஷ், சோமா பாஸு... இந்தியாவின் டாப் 10 பெண் பத்திரிகையாளர்களிடம் என்ன விசேஷம்? #NationalPressDay
TAGS :
COMMENTS