[ad_1]
"டேய்! ஸ்கூலுக்குப் புறப்படலையா?"
"அம்மா... டிவியில இன்னிக்கு லீவு சொல்றாங்களான்னு பார்த்து அப்பறம் ரெடியாகலாம்"
ஒரு வாரமாய்ப் பள்ளிச் செல்லும் வீடுகளில் நடக்கும் உரையாடல்தான் இது. மழை பொழியும் மாவட்டங்களில் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களிலும், தங்கள் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறதா என்பதை, ஆவலோடு தொலைக்காட்சியில் பார்ப்பது பிள்ளைகளுக்கு வழக்கமாகி விட்டது. பள்ளிக்கு விடுமுறை அளிக்காவிட்டால் சோகத்துடன் குளிக்கச் செல்வார்கள் குழந்தைகள். தொடர் மழை இல்லாவிட்டாலும் அவ்வப்போது மழை பெய்யும் காலம் இது. பள்ளிக்குக் குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் கீழ்காணும் 10 விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
1. வெந்நீர்:
பிள்ளைகளுக்கு வழக்கமாகக் கொடுத்தனுப்பும் பாட்டிலில், நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி, இளஞ்சூட்டுக்கு வந்ததும் அதை ஊற்றிக் கொடுக்கவும். ஏனெனில் சளி பிடித்துகொள்வது தொடங்கிக் காய்ச்சல் வரை பிள்ளைகளைப் பாதிப்படைவதிலிருந்து காத்துக்கொள்ள இது அவசியம். குளிர்ந்த நீரைக் குடித்தே பழக்கப்பட்டிருந்தாலும் மழைக்காலம் முடியும் வரை வெந்நீர் குடிக்கப் பழக்குங்கள்.
2. கர்சீஃப்: மழைக்காலத்தில் சளி பிடித்திருக்கலாம். அதனால், அடிக்கடி தும்மல் வரக்கூடும் அல்லது மூக்கிலிருந்து சளி வரக்கூடும். அந்த நேரங்களில் பயன்படுத்திக்கொள்ள கர்சீஃப் மிக அவசியம். மற்ற குழந்தைகள் தும்மும்போது காற்றில் கிருமிகள் பரவக்கூடும். அந்த நேரத்தில் உங்கள் பிள்ளைகள் கர்சீஃப் பயன்படுத்தவும் அறிவுறுத்துங்கள்.
3. குடை: மழையில் நனைவதுதான் எல்லாக் குழந்தைகளுக்கும் பிடிக்கும். ஆனால், அது அவர்களின் உடல்நிலையைப் பாதிக்கும் என்பதால், மறக்காமல் குடை அல்லது ரெயின் கோட் கொடுத்து அனுப்புங்கள். காலையில் புறப்படும்போது நன்றாக வெயில் அடிக்கலாம். ஆனால், மதியத்திற்கு மேல் மழை வரக்கூடும் அதனால் எதற்கும் இருக்கட்டும் என, குடை அல்லது ரெயின் கோட்டைக் கொடுத்துவிடுங்கள்.
4. ஸ்கூல் பேக் பத்திரம்: குடை கொடுத்துவிட்டால், பிள்ளைகள் நனைய மாட்டார்கள். சரி, ஆனால், ஸ்கூல் பேக் நனைந்துவிடுமே. அதற்காக, பெரிய அளவிலான பாலித்தீன் கவர் ஒன்றை வாங்கிக்கொடுங்கள். பிறகு, அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் வீட்டிலேயே செய்துகாட்டுங்கள்.
5. செறுப்பு: பல பள்ளிகளில் பிள்ளைகளை சூ அணிந்தே வரச் சொல்கின்றனர். ஆனால், மழைக்காலத்தில் சூ அணிந்துசெல்லும்போது தேங்கியிருக்கும் மழைநீரில் காலை நனைத்துவிட்டால் அதனுள் நீர் தங்கிவிடும். மேலும் சாக்ஸின் ஈரத்தால் நாள் முழுவதும் ஈரத்தில் நிற்பது போன்ற நிலை உருவாகும். அதனால், பள்ளி நிர்வாகத்திடம் பேசி சில நாள்களுக்கு மட்டும் செறுப்பு அணிந்து வர அனுமதிக் கேளுங்கள்.
6 லஞ்ச் பாக்ஸ்: பிள்ளைகளுக்குக் கொடுத்தனுப்பும் லஞ்ச் பாக்ஸில் குளிர்ச்சியைத் தரும் உணவு வகைகளைத் தவிர்த்துவிடுங்கள். ஆரஞ்ச், சாத்துக்குடி போன்ற குளிர்ச்சித் தரும் பழங்களையும் தவிர்த்துவிடலாம். இரண்டு, மூன்று மணிநேரம் உணவின் சூட்டைத் தக்க வைக்கும் ஹாட் பாக்ஸ்களைப் பயன்படுத்தலாம்.
7. ஸ்வெட்டர்: குழந்தைகள், பள்ளிக்கு வேன் அல்லது ஆட்டோவில் செல்லும்போது குளிரான காற்று வீசும். அந்த நேரத்தில் அணிந்துகொள்ள ஸ்வெட்டர் இருப்பின் மறக்காமல் கொடுத்து அனுப்பவும்.
8. மருந்து: காய்ச்சல் அல்லது வேறு எதற்கேனும் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் குழந்தைகள் எனில் மறக்காமல் அவர்களுக்கான மருந்துகளைக் கொடுத்து அனுப்புங்கள். இரண்டு வேளைகளுக்கான மருந்து இருக்கும்பட்சத்தில் தனித்தனி கவரில் போட்டு, அதன் மேல் எப்போது சாப்பிட வேண்டும் என்பதைத் தெளிவாக எழுதித் தரவும் மறக்காதீர்கள்.
9. காயம் இருந்தால்: குழந்தைகளுக்கு ஏதேனும் அடிபட்டுக் காயம் பட்டிருந்தால், அதன்மீது நீர் பட்டுவிடக்கூடாது என்று மருத்துவர் கூறியிருந்தால் அதற்கு உரிய பாதுகாப்போடு பள்ளிக்கு அனுப்புங்கள். அந்த விஷயத்தை வகுப்பு ஆசிரியரிடம் கூறி, குழந்தையின் மேல் தனிக் கவனம் கொள்ளச் சொல்லுங்கள்.
10. ஆடை: எவ்வளவு கவனமாக இருந்தும் மழையில் நனைந்துவிடும் சூழல் வந்துவிட்டால், நனைந்த ஆடைகளோடு நாள் முழுவதும் இருக்க வேண்டியிருக்கும். அதனால், ஒரு துண்டும் ஒரு செட் ஆடையும் கொடுத்து அனுப்பலாம்.
மழை சமயம் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும்போது கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! #GoodParenting
TAGS :
COMMENTS