[ad_1]

Chennai: நவ.1, தென்னிந்திய வரலாற்றில் முக்கியமான நாள்...மொழிவாரி மாநிலங்களுக்கான கோரிக்கைகளின் அடிப்படையில் அன்றைய தினம்தான் கேரளமும் கர்நாடகமும் தனிமாநிலங்களாக அங்கீகரிக்கப்பட்டன. நமது தமிழகமும் சென்னை மாநிலமாகப் புதுப்பிறப்பெடுத்தது. ஆனால் மற்ற இரண்டு மாநிலங்கள் அந்த நாளைத் தங்களது மாநில தினமாகக் கொண்டாடுவது போல், தமிழகம் கொண்டாடுவது இல்லை. இந்த நிலையில் முதன்முறையாக தமிழ்த் தேசியக் கொள்கைகளை முன்வைத்து செயல்பட்டுவரும் பல்வேறு கட்சிகளும் சில இயக்கங்களும் ’சென்னை மாநிலம்’ பிறந்ததினமான நேற்றைய தினத்தை மாநில தினமாக கொண்டாடின.  

இதே மேடையில் இதழியலாளர்கள், கலைஞர்கள், இடதுசாரிக் கொள்கையாளர்கள், மாணவர் அமைப்புகள் எனப் பலதரப்பினர் ஒன்றிணைந்து 'தன்னாட்சித் தமிழகம்’ என்கிற கூட்டியக்கத்தை தொடங்கினர்.   


இந்த நிகழ்வில் பேசிய கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான 'ஆழி' செந்தில்நாதன், “தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகளுக்காக பல ஆண்டுகளாகப் போராடிவரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தந்தைப் பெரியார் திராவிடர் கழகம், மக்கள் இணையம், பச்சைத் தமிழகம், தைப்புரட்சி, பூவுலகின் நண்பர்கள், தமிழக தேசிய முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் 'தன்னாட்சித் தமிழகம்' என்ற பெயரில் கூட்டியக்கம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறோம். 

நாட்டின் பல்வேறு பிரச்னைகளுக்காகப் பல இயக்கங்கள் போராடி வருகின்றன. நீட், ஜல்லிக்கட்டு, ஹைட்ரோகார்பன் திட்டங்கள், ஜி.எஸ்.டி மூலமாக மாநில வரிவருவாய் இழப்பு, இந்தித் திணிப்பு, ஈழ இனப்படுகொலை, மீனவர்கள் படுகொலை, கிழக்குக் கடற்கரையோரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுதல், காவிரி மேலாண்மை வாரியம், பாலாறு, முல்லைப்பெரியாறு சிக்கல், கீழடி தொல்லியல் அகழாய்வு, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டிய வேலைவாய்ப்பு பறிபோதல், ஆந்திரத்தில் நிகழும் தமிழர்கள் படுகொலைகள், கூடங்குளம் அணு உலை, விவசாய நிலங்களில் கெயில் மற்றும் ஓ.என்.ஜி.சி எரிவாயுக் குழாய் பதித்தல், நவோதயா பள்ளிகள் மூலமாக மொழித்திணிப்பு உள்பட பல பிரச்னைகளால் தமிழகம் கொந்தளித்துப் போயிருக்கிறது. 



இதற்காகப் பல்வேறு அமைப்புகளும் தனிமனிதர்களும் மக்களும் முன்னெடுப்பவை தனித்தனியான போராட்டங்களாகத் தோன்றினாலும், இந்த எல்லாப் போராட்டங்களுக்கும் அடிப்படையாக இருப்பது தமிழகம் தனக்கான உரிமைகளை இழந்திருப்பதே. ஏற்கெனவே சட்டப்படியான பல உரிமைகள் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டிருப்பது, அளிக்கப்படவேண்டிய பல உரிமைகள் அளிக்கப்படாமலிருப்பதுமே இத்தகைய சிக்கல்கள் ஏற்பட முதன்மையான காரணங்களாக அமைந்திருக்கின்றன. 

தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதையே தனது பிரதான நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது. இதனால் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் மாநில சுயாட்சி கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன. இதனடிப்படையில் தமிழகத்துக்கான மாநில சுயாட்சியுடன் மேலும் சில கோரிக்கைகளையும் கூட்டியக்கம் மூலம் வலியுறுத்துவோம்” என்றார்.


மேலும் தொடர்ந்த அவர், “கேரளமும் கர்நாடகமும் இந்த நாளைக் கொண்டாடுவது போல ஒவ்வோர் ஆண்டும் நவ.1 - ம் தேதியை 'தமிழர் தாயக நாளாக' அரசு அறிவித்து விழா எடுக்கவேண்டும். மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது எல்லை காக்கப் போரிட்ட, அதில் உயிர்நீத்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு உதவித்தொகை தரப்பட வேண்டும். இந்தப் போராட்ட வரலாற்றை தமிழ்ப்பாட நூல்களில் சேர்க்கவேண்டும். மேலும், தற்போதைய சூழலில், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முயற்சி மேற்கொள்ளவேண்டும். விவசாயத்தைப் பொதுப்பட்டியலில் இணைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு மாநில அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களுடனான எல்லையை மறுவரையறை செய்யவேண்டும்" உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தார்.