[ad_1]

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மழை பெய்யும்போது இடியும் மின்னலும் அதிகமாகக் காணப்படுகிறது. கனமழை கொட்டித் தீர்ப்பதால் சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது. தொடர் கனமழையால் கன்னியாகுமரி மாவட்ட குளங்களும் நிரம்பி வருகின்றன. இதுவரை 198 குளங்கள் முழுமையாக நிரம்பி உள்ளன.




420 குளங்கள் 75 சதவிகிதம் நிரம்பி உள்ளன. 596 குளங்கள் 50 சதவிகிதம் நிரம்பியிருக்கின்றன. தொடர் கனமழை காரணமாகக் குமரி மாவட்டத்தில் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மழை அளவு குறைவாக இருந்ததாலும், தண்ணீர் குறைவாக இருந்ததால் பேச்சிப்பாறை அணையும் தாமதமாகத்தான் திறக்கப்பட்டது.




இதனால் கன்னிப் பூ சாகுபடி பணியும் மிகவும் தாமதமாகவே தொடங்கியது. தற்போது பெரும்பாலான இடங்களில் பயிர்கள் அறுவடைக்குத் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி கன மழையாகப் பெய்து வருவதால்  நெற்பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மழைக் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் அதிகமாக ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.