[ad_1]

மழை அழகுதான்; ரசனைகளின் உச்சம்தான் மழை. ஆனால், அப்போது நாம் எங்கே இருக்கிறோம் என்பதும் முக்கியம். ஜன்னலோரப் பேருந்துப் பயணமும், ஜன்னலுக்கு வெளியே சாரலோடு இயற்கை காட்சிகளும், கூடவே இளையராஜா இசையும் என்றால் அழகுதான். பால்கனி சாய்வு நாற்காலியும், கோப்பையில் சூடான காபியும் சமையலறையிலிருந்து வரும் பஜ்ஜி வாசனையும் என்றால் பேரானந்தம்தான். மலைச் சாலை நடைப்பயணமும் கருமேகக் கூட்டமும், மேனியைத் தழுவும் மழைத்துளிகளும் என்றால் சிலிர்ப்புதான். ஆனால், மாநகரத்தின் பெருமழை அப்படியிருப்பதில்லை. அது கொடுக்கும் திகில் அனுபவங்கள், 'காஞ்சனா'வையும் 'கான்ஜுரிங்' கையும் தலா பத்துப் பாகங்கள் பார்ப்பதற்குச் சமமாக உள்ளது. அப்படி நேற்றைய ஒருநாளின் சென்னை மழை அனுபவங்களைச் சொல்கிறார்கள் இவர்கள்... 




நான்கு தூறல் விழுந்தாலே, அப்பா அல்லது அண்ணன் வகுப்பறை வரை டூவீலரைக் கொண்டுவந்து அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரிப் பெண் சங்கீதா. படிப்பு முடிந்து வேலைக்காகச் சென்னைக்கு வந்திருக்கிறார். பெண்கள் விடுதியும், அலுவலகமும் தவிர்த்து அதிகம் வெளியே செல்லாதவருக்கு இதுதான் முதல் மழை. 

''காலையில் மழை பெய்தபோதே, பஸ் பிடிச்சு ஆஃபீஸ் போக முடியாதுனு தெரிஞ்சுடுச்சு. வழக்கமாக, ஐம்பது ரூபாய் வாங்கும் ஆட்டோக்காரர்கள், 'நூறு ரூபாய் இருந்தால் பேசு. இல்லைன்னா அடுத்த ஆளுக்கு வழிவிட்டு நகரு'னு சொல்லிட்டாங்க. வேற வழியில்லாமல் வந்தேன். சாயந்திரம் பெரும் மழை விட்டு கிளம்பினால், இருநூறு ரூபாய் கொடுத்தாலும் ஆட்டோ கிடைக்காத நிலை. நடந்தேபோவோம்னு சாலைக்கு வந்தால், பிளாட்பாரம் எது... ரோடு எதுனு தெரியாத அளவுக்குச் சாலையெல்லாம் ஆறு. மேடு, பள்ளம் தெரியாமல் மூணு இடங்களில் தடுக்கி விழப்போகும் கடைசி நொடிகளில் ஸ்டெடி ஆனேன். 'இடுப்பு வரைக்கும்தானே சேறாகி இருக்கு. மிச்சத்தை நாங்க பார்த்துக்கறோம்'னு சொல்ற மாதிரி, நாலு சக்கர நல்லவங்களும் இரண்டு சக்கர இனியவர்களும் தண்ணீரோடு சேற்றை வாரிக் கொடுத்துட்டுப் போனாங்க.



விளக்குகளும் எரியாததால் குருட்டாம்போக்கில் கால்களை எடுத்துவெச்சு நனைஞ்ச கோழிக்குஞ்சு மாதிரி நடுங்கிக்கிட்டே பாதி தூரம் போயிட்டேன். ஒரு டுவீலர் மனிதர், 'எங்கேமா போகணும்னு. வண்டியில் ஏறிக்க வழியிலே விட்டுடறேன்'னு சொல்றார். சந்தோஷத்துக்குப் பதில் பயம் வருது. ஏதேதோ சினிமா காட்சிகள், செய்திகள் மொத்தமா கண்ணு முன்னாடிவந்து நிற்குது. கையெடுத்துக் கும்பிட்டு 'நன்றி வேண்டாம்'னு சொல்லிட்டு நடக்க ஆரம்பிச்சேன். தங்கியிருக்கும் தெருவுக்கு வந்து ஹாஸ்டல் கட்டடத்தையும் அங்கே எரியும் விளக்கு வெளிச்சத்தையும் பார்த்ததும், கடலிலிருந்து கலங்கரை விளக்கத்தைப் பார்த்த திருப்தி. ஒரு வழியா உள்ளே நுழைஞ்சு ரூம் கதவைத் திறந்தால், பிடிச்சுவெச்சிருக்கிற மொத்த காவேரியையும் கர்நாடக திறந்துவிட்ட மாதிரி தண்ணீர் கொட்டுது. பதறிபோய் வார்டனைக் கூப்பிட்டால், 'பாத்ரூம்ல அடைச்சுட்டு இருக்கும். இப்போதான் பக்கத்து ரூம் ஷாலினிகிட்ட ஸ்டிக் கொடுத்திருக்கேன். அவங்க ரூமில் குத்தி கிளின் பண்ணி முடிச்சதும் வாங்கிக்க'னு சொல்லிட்டு கூலா நடந்துபோறாங்க. அப்புறம் என்ன? செகன்ட் இன்னிங்ஸை ரூமில் ஆரம்பிச்சேன்'' என்கிறார் சங்கீதா.



மென்துறையில் பணியாற்றும் மங்கை மாலினி. இரண்டாம் வகுப்புப் படிக்கும் குட்டி இளவரசனுக்கு அம்மா. 

''பாதி நாளிலேயே ஸ்கூல் முடிஞ்சுடுச்சுனு பையன் வீட்டுக்கு வந்துட்டிருந்தான். 'பசியோடு கிச்சனில் எதையாவது உருட்டிட்டு இருக்கானா? பக்கத்து பிளாட் பசங்களோடு சேர்ந்துட்டு மழையில் நனைஞ்சுட்டு இருக்கானா?' என ஆயிரம் கேள்விகள் மனசுல ஓடுது. மழையைப் பற்றி கவலைப்படாமல் ஆஃபீஸ் டைம் முடிஞ்சதும் ரெயின் கோட் மாட்டிக்கிட்டு ஸ்கூட்டியில் கிளம்பிட்டேன். கொட்டற மழை. இன்ச் பை இன்சா நகருது. நான் அப்பவும் இந்த மாதிரி மழை சமயத்தில் ஒரு டெக்னிக்கை ஃபாலோ பண்ணுவேன். காருக்குப் பின்னாடி ஒரு டயரைத் தொடர்ந்து என் வண்டியை ஓட்டிட்டுப்போவேன். ஏன்னா, அந்த டயரின் ஷேக்கிங்கை வெச்சு அங்கே பள்ளம் எதுவும் இல்லைன்னு தெரிஞ்சுக்கலாம். டயரால் தண்ணீரும் விலகும். அது மறுபடியும் சேருறதுக்கு முன்னாடி கடந்துட்டால் ஸ்கூட்டி எஞ்சினில் தண்ணீர் புகாது. 'ஓ நீ அவ்வளவு புத்திசாலியோ? இப்போ பாரு என் வேகத்தை'னு மழை கொட்டுது. முன்னாடி போறது காரா... மீன்பாடி வண்டியானு தெரியாத அளவுக்கு மழை முகத்தை மறைக்குது. ஹேண்ட்பேக்ல இருந்து போன் வேற விடாமல் அடிச்சுட்டே இருக்கு. 'அம்மா வந்துட்டியா?'னு கேட்க நினைக்கும் பையனாதான் இருக்கும்.



எப்படியோ நான் இருக்கும் ஏரியாவுக்கு வந்துட்டேன். பவர் கட். என் புத்திசாலித்தனத்தைக் காட்டவும் எந்த காரும் முன்னாடி போகலை. போகப்போக 'பாகுபலி' படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஆற்றில் இறங்கின மாதிரி ஸ்கூட்டி உள்ளே உள்ளே இறங்குது. நாங்க கொடுத்த வரிப் பணமெல்லாம் இப்படி மோசமான ரோட்டுல தண்ணியாப் போகுதே. மக்கள் பிரதிநிதிகளா நீங்க சாப்பிட்டது போக கொஞ்சம் சிந்தினது சிதறினதையாவது ஊருக்குச் செய்யுங்கனு சொல்லிக்கிட்டேன். நல்லவேளை, வீட்டுக்கு வர்றவரைக்கும் வண்டி நிற்கவில்லை. மழை இல்லைன்னா கஷ்டம்; மழை வந்துட்டால் பெரும் கஷ்டம்னு இருக்கிற சென்னையில் வாழறது, சாவோடு சடுகுடு ஆடற மாதிரியே இருக்கு'' என்கிறார் முகமெல்லாம் திகிலாக. 


மக்களே... இதே மாதிரி உங்களுக்கும் பல அனுபவங்கள் இருக்கும்தானே. அதையெல்லாம் கமென்ட்டில் கொஞ்சம் கசியவிடுங்களேன்!