[ad_1]

மணல் கொள்ளையை தடுக்க திருச்சி கலெக்டர் நள்ளிரவில் ரகசிய விசிட் அடித்து மணல் கொள்ளையர்களை பீதியடையச் செய்துள்ளார்.

காவிரியில் மணல் அள்ளத் தடைவித்தாலும், திருச்சி மாவட்டம் முசிறி, தொட்டியம் பகுதிகளில் திருட்டுத்தனமாக மணல் கொள்ளை நடந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில் நள்ளிரவில் களமிறங்கிய திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி, திருட்டு மணல்குவாரி கண்டுபிடித்ததுடன், 13 லாரிகளையும், 19 பைக்குகளையும் பறிமுதல் செய்துள்ளார்.


திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த நத்தம் ஊராட்சி குறிஞ்சி நகர்ப் பகுதியில் காவிரி ஆற்றில் மணல் கொள்ளையர்கள் திருட்டுத்தனமாக மணல்குவாரியை நடத்தி வந்தனர். இங்கிருந்து தினந்தோறும் லாரிகளில் மணல் கடத்தி, தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் கர்நாடகா மற்றும் கேரளாவிற்கும் விற்பனை செய்து வந்தனர்.

இப்பகுதியில் உள்ள அலுவலர்கள் மணல் கடத்தல் குறித்து போதிய நடவடிக்கை எடுப்பதில்லை என்கிற தகவல் திருச்சி மாவட்ட கலெக்டருக்கு கிடைத்தது. இதையடுத்து கலெக்டர் ராசாமணி நேற்று நள்ளிரவில் கனிமவள அதிகாரி குருசாமி, தொட்டியம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் ஆயுதம் தாங்கிய போலீஸாருடன் மணல் கொள்ளை நடக்கும் பகுதிகளில் ரகசிய விசிட் அடித்தனர்.

அப்போது,அப்பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் லாரிகளுடன் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள், அதிகாரிகள் வருவதைப் பார்த்ததும், தலைதெறிக்க ஓடினர். அதில் காட்டுப்புத்தூர் போலீஸார் மணல் திருட்டில் ஈடுபட்ட கீழக்காரைக்காடு கண்ணன், மகேந்திரன், விமல் ஆகிய மூன்று பேரை மடக்கிப் பிடித்தனர். மற்றவர்கள் தப்பிய நிலையில் அங்கு மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த மணலின் அளவினை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 13 லாரிகளையும், மணல் கடத்துபவர்களுக்கு உதவியாகவும், உளவு பார்க்கவும் பயன்படுத்தப்பட்ட 19 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்ய கலெக்டர் ராசாமணி உத்தரவிட்டார்.

பிடிபட்ட மூன்று நபர்களிடம் காட்டுப்புத்தூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருட்டுத்தனமாக பெரிய அளவில் செயல்பட்டு வந்த மணல்குவாரியை மாவட்ட ஆட்சியர் ராசாமணி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு நள்ளிரவில் ஆய்வு செய்து வாகனங்களைப் பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணல் கடத்தலில் ஈடுபடுவோர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


நள்ளிரவில் கலெக்டர் களமிறங்கி, மணல் கொள்ளையை அம்பலப்படுத்தியதுடன், 13 லாரிகளை மடக்கிப் பிடித்த கலெக்டருக்கு பாராட்டு குவிகிறது.