
[ad_1]
நெல்லை அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இசக்கிமுத்து என்பவர் கந்துவட்டிக் கொடுமை தாங்காமல் கடந்த 23-ம் தேதி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவத்தின் சோகம் மாறுவதற்கு முன்பாக மேலும் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிகாரிகளின் மோசமான நடவடிககை காரணமாக தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள் நடக்கின்றன.
நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியைச் சேர்ந்தவர், பாஸ்கரன். இவர், அரசுப் பேருந்து ஓட்டுநராக உள்ளார். 22 வருட அனுபவம் வாய்ந்த இவர், கட்டபொம்மன்நகர் பணிமனையில் பணியாற்றி வருகிறார். நெல்லையிலிருந்து மானூர் செல்லும் வழித்தடத்தில் இயங்கும் பேருந்தில் ஓட்டுநராக இருந்து வருகிறார். அ.தி.மு.க-வில் தினகரன் அணியில் தொழிற்சங்கப் பொறுப்பிலும் இருந்து வருகிறார்.
ஆளுங்கட்சியின் தொழிற்சங்கத்தில் இல்லாததால் இவருக்குப் பணி வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் அதிருப்தியடைந்த அவர் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில், உடல்மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி பாஸ்கரன் கூறுகையில், ’’அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக எனக்குப் பணி வழங்காமல் தினமும் அலுவலகத்துக்கு வந்து விட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டியதிருக்கிறது. இதனால் எனக்கு இந்த மாதம் அளவுக்கு அதிகமாக விடுமுறை வருவதால், சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் நிலைமை உள்ளது. அதனால் தீக்குளிப்பதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை’’ என்று கதறினார்.
இது பற்றி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ’அவருக்கு மாற்றுப் பணி கொடுத்தாலும் செல்ல மறுக்கிறார். தான் வழக்கமாகச் செல்லக்கூடிய வழித்தடத்தில் மட்டுமே செல்ல விரும்புவதாகக் கூறுவதால் பணி கொடுக்கப்படவில்லை. இருந்தாலும்., அவர் தீக்குளிக்க முயற்சி செய்தது பற்றி கேள்விப்பட்டதும் அதிகாரிகளைக் காவல்நிலையத்துக்கு அனுப்பி அவரிடம் பேச்சுவாரத்தை நடத்த உத்தரவிட்டிருக்கிறோம். அவருக்கு உரிய பணியைக் கொடுக்கத் தயாராகவே உள்ளோம்’ என்கிறார்கள்.

COMMENTS