[ad_1]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விவசாயிகள் செலுத்திய நிலுவையிலுள்ள இரண்டு வருடப் பயிர்க்காப்பீட்டுத் தொகையை வழங்கிடக்கோரி ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, நெல்லை மற்றும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய வைகோ, ‘‘மிகவும் பாவப்பட்ட ஒதுக்கப்பட்டவர்களாக விவசாயிகள் பார்க்கப்படுகின்றனர். இவர்கள் சேற்றில் கால் வைக்காவிட்டால் மற்றவர்கள் எப்படி சோற்றில் கை வைக்க முடியும். விவசாயிகளை மத்திய, மாநில அரசுகள் சோதிப்பது மட்டுமல்லாமல் பருவமழையும் கடந்த இரண்டு ஆண்டாகச் சோதித்துவிட்டது. மழை பெய்யாமல் விதைத்த பயிர் முளைக்காமல், முளைத்த பயிர் வளராமல் அதையும் தாண்டி பாதி வளர்ந்த நிலையிலுள்ள பயிர் கருகிவிட்டது. கூட்டுறவு வங்கிகளிலும் வட்டிக்குப் பணம் வாங்கியும், வீட்டிலுள்ள மனைவி, மகளின் நகைகளை அடகு வைத்தும் அந்தப் பணத்தில் விவசாய வேலைகளைத் தொடங்கி மழையை நம்பி ஏமாந்து ஒரு கட்டத்தில் தன் உயிரை மாய்த்தும் விட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 400 பேருக்கும் மேல் இருக்கும். ஆனால், இறந்த விவசாயிகளின் பட்டியலில் எண்ணிக்கையைக் குறைவாகக் காட்டி தப்பித்துக்கொண்டது எடப்பாடி அரசு.
டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பலவகைப் போராட்டம் நடத்தியபோது ஒருமுறைகூட பிரதமர் மோடி நேரடியாகச் சென்று அவர்களின் கோரிக்கையைக் கேட்கவில்லை. அவர் சார்பில் ஒரு மத்திய அமைச்சரையாவது அனுப்பி அவர்களிடம் பேச வைத்திருக்கலாம் அதையும் செய்யவில்லை. அல்லது அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளில் ஒருசிலரையாவது மோடி அழைத்துப் பேசியிருக்கலாம். இதில் எதையுமே அவர் செய்யவில்லை. விவசாயிகள் என்ன தீண்டத்தகாதவர்களா? அரசு ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டால் உடனே அவர்களை அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளில் சிலவற்றையாவது நிறைவேற்றி விடுகிறது அரசு. ஆனால், காப்பீட்டுத் தொகைக்காகப் போராடி வரும் விவசாயிகளை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. கார்ப்பரேட் அரசுதான் மோடி அரசு. அதற்கு ஜால்ரா போட்டு வரும் அரசுதான் எடப்பாடி அரசு. விவசாயத்தை மத்தியரசின் பட்டியலுக்குக் கொண்டு சென்றால் இந்தியாவில் விவசாயம் முற்றிலுமாக அழிந்துவிடும்.
நிலுவையிலுள்ள பயிர்க்காப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு தாமதிக்காமல் வழங்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனத் தமிழகம் முழுவதும் விவசாயிகள் அறிவித்த உடனேதான், கடந்த அக்டோபர் 20-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால், கடந்த 2015-16-ம் ஆண்டுக்கான காப்பீட்டுத் தொகை வழங்குவது எப்போது?'’ என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
’மோடியின் அரசு ஒரு கார்ப்பரேட் அரசு’: வைகோ ஆவேசம்
TAGS :
COMMENTS