[ad_1]
’முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசும் அவர் தலைமையிலான அமைச்சரவையும் துரதிஷ்டவசமானவை. ஒரு பிரதமர் பெயர் கூட தெரியாமல் ஒரு அமைச்சர் இருப்பதை நினைத்தால் வேதனையாக உள்ளது’ எனக் கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமணவிழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த இளங்கோவன், ‘முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசும் அவர் தலைமையிலான அமைச்சரவையும் துரதிஷ்டவசமானவை. ஒரு பிரதமர் பெயர்கூட தெரியால் ஒரு அமைச்சர் இருப்பதை நினைத்தால் வேதனையாக உள்ளது. இது போன்ற அ.தி.மு.க அமைச்சர்கள் செய்தியாளர்களைச் சந்திப்பதை தவிர்க்க வேண்டும். டெங்குக் கொசு ஒழிப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தோற்றுப் போய்விட்டது. ஆரம்ப நிலையிலேயே துரித நடவடிக்கைகள் எடுக்காததுதான் அதிகமானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
டெங்குக் கொசுவை ஒழிக்க துப்புரவுப் பணியாளர்களை அழைத்து கொசு ஒழிப்பிற்கு மருந்து அடிக்கச் சொல்லாமல், கொசுப்புழு உற்பத்தியைத் தடுக்க நடவடிக்கை எடுக்கச் சொல்லாமல் இக்கொசுக்களை ஒழிக்க, எய்ம்ஸ் மருத்துவர்களை அழைக்கும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், டெங்குக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க துப்புறவுப் பணியாளர்களைப் பயன்படுத்தச் சொன்னாலும் சொல்லுவார். அவர் பேச்சில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே அ.தி.மு.க செத்துவிட்டது. அமைச்சர்கள் அனைவரும் ஊழல் மூலமாகப் பணத்தினை சேர்ப்பதிலேதான் குறியாக உள்ளனர். தமிழகத்தின் மகாராணியாக செயல்பட்டு வரும் தமிழிசை செளந்தரராஜன், திருமாவளவன் மற்றும் காங்கிரஸ் கட்சி குறித்தும் அவதூறாகப் பேசி வருகிறார். இதுபோல அவர் தொடர்ந்து பேசிவருவதை கைவிட வேண்டும். அதோடு, பேசுவதில் அவருக்கு அடக்கமும் வேண்டும். பணம் செல்லாது என்ற அறிவிப்பு, ஜி.எஸ்.டி முதல் தற்போது சர்க்கரைவிலை உயர்வு வரை பிரதமர் மோடியின் செயல்பாடுகளைக் கண்டு மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். நடிகர்கள் கமல், ரஜினிக்கு மக்களிடம் நல்ல மரியாதை உள்ளது. கட்சி தொடங்கி அரசியலில் ஒரு குறுகிய வட்டத்திற்குள் சிக்கிவிடக் கூடாது.’’ என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
’பிரதமர் பெயர் கூட தெரியாமல் ஒரு அமைச்சர்! ’- எடப்பாடி அரசை சாடும் இளங்கோவன்
TAGS :
COMMENTS