பிரதமர் மோடியை விமர்சித்ததாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது லக்னோ நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

 


பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரகாஷ்ராஜ் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலையில் பிரதமர் மோடி மௌனம் காப்பது அதிர்ச்சியளிப்பதாகக் கூறியிருந்தார். மேலும், தனது தேசிய விருதுகளைத் திரும்ப அளிக்கத் தயங்க மாட்டேன் என்றும் பிரகாஷ் ராஜ் கூறியிருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், தேசிய விருதுகளைத் திரும்ப அளிப்பதாக எந்த இடத்திலும் தான் கூறவில்லை என்று விளக்கம் அளித்த அவர், ’பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக பிரதமர் மோடி, தனது கண்டனத்தையோ கருத்தையோ பதிவு செய்யாதது ஏன். நாட்டின் குடிமகன் என்கிற முறையில் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் காப்பது எனக்கு வலியையும் வேதனையையும் பயத்தையும் அளிக்கிறது.

நான் எந்தவொரு கட்சியைச் சேர்ந்தவரைப் பற்றியும் பேசவில்லை. நான் எந்தவொரு கட்சியையும் சாராதவன். நாட்டின் குடிமகன் என்கிற முறையில் பிரதமரிடம் நான் கேள்வி கேட்கிறேன். இதைக் கேட்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது’ என்று கூறியிருந்தார். இந்தக் கருத்துகள் மூலம் பிரதமருக்கு எதிராக பிரகாஷ்ராஜ் பேசியதாகக் கூறி வழக்கறிஞர் ஒருவர் லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு, அக்டோபர் 7-ல் விசாரணைக்கு வருகிறது.