[ad_1]
அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன் நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் உள்ள அழகிய நம்பிராயர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தார்.
டி.டி.வி.தினகரன் இன்று நெல்லை மாவட்டத்துக்கு வந்தார். அவரது வருகை குறித்து கட்சி நிர்வாகிகள் யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. குறிப்பாக, நெல்லை மாவட்டச் செயலாளரான பாப்புலர் முத்தையா, மாநிலங்களவை உறுப்பினரான விஜிலா சத்யானந்த் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களுக்குக் கூட தகவல் தெரிவிக்கப்படவில்லை. தினகரன் வருகை பற்றிய விவரம் தெரியாமல் உளவுத்துறையினரும் தவித்தனர்.
இந்த நிலையில் ரகசியமாக வந்த அவர், கடம்பூர் முன்னாள் யூனியன் சேர்மனான மாணிக்கராஜா மற்றும் முன்னாள் நெல்லை மாவட்ட கவுன்சிலரான பரமசிவ ஐயப்பன் ஆகியோரை மட்டும் அழைத்துக்கொண்டு களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலுக்குச் சென்றார். நின்ற, அமர்ந்த, நடந்த, கிடந்த, இருந்த என ஐந்து நிலைகளிலும் பெருமாள் காட்சி தரும் இந்தக் கோயில் முக்கியத்துவம் வாய்ந்த வைணவத் தலமாகும்.
இத்தலத்தினைப் பற்றி திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பாடியுள்ளார்கள். இத்தலத்தின் மூலவர் அழகிய நம்பிராயர் என்றும் தாயார் குறுங்குடிவல்லி நாச்சியார் என்றும் அழைக்கப்படுகின்றனர். வைணவத் தலமான இக்கோயிலின் சிவ பெருமானுக்கும் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சிறப்பு தீப பூஜை நடத்தி வழிபாடு செய்தால் எதிரிகள் வீழ்வார்கள் என்றும், நினைத்த நன்மைகள் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.
அதனால், இரட்டை இலை வழக்கு, சின்னத்துக்காக லஞ்சம் கொடுத்த வழக்கு, அந்நியச் செலாவணி வழக்கு ஆகிய வழக்குகளால் நெருக்கடியைச் சந்தித்து வரக்கூடிய அவர், அதிலிருந்து விடுபட சிறப்பு பூஜை நடத்தினார். சில நேர்த்திக் கடன்களையும் செலுத்தினார். பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’தை பிறந்தால் வழி பிறக்கும். பொங்கலுக்குள் தமிழக அரசு விடுவிக்கப்பட்டு விடும். ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தப்பட்டால் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். இரட்டை இலைச் சின்னம் எங்களுக்கே கிடைக்கும்’ என்று மட்டும் தெரிவித்தார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
திருக்கறுங்குடி நம்பி கோயிலில் தினகரன் சிறப்பு வழிபாடு!
TAGS :
COMMENTS