[ad_1]
Chennai:
அமெரிக்கா, லண்டனில் தேங்கும் மழைநீர்கூட சென்னையில் தேங்கவில்லை என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.வி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.
மழை வெள்ள தடுப்பு நடவடிக்கை குறித்து நிதியமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சென்னை மாநகராட்சியில் இன்று ஆய்வு கூட்டம் நடத்தினர். அப்போது, சென்னையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன் பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கடந்த 2015ல் பெய்த மழைக்கும் இன்று பெய்த மழைக்கும் வித்தியாசம் இருக்கிறது. சில தொலைக்காட்சிகள் உள்நாேக்கத்துடன் செய்தி வெளியிடுகிறது. எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக தொலைக்காட்சிகள் செயல்படுகின்றன. உங்களது ஒத்துழைப்பு எங்களுக்கு வேண்டும். நாங்கள் செய்கிற வேலையை நன்றாக செய்து முடிக்கிறோம்.
முடிச்சூர் பகுதியில் பல நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது. அடையாறு ஆறு, கூவம் ஓரத்திதில் இருந்த 5 ஆயிரம் வீடுகள் அகற்றப்பட்டு வேறுஇடத்துக்கு அந்த மக்களை அமர்த்தியிருக்கிறோம். சென்னையில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை இயங்கிக்கொண்டு இருக்கிறது. அதிகாலை மூன்று மணி வரை ஐஏஎஸ் அதிகாரிகள் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கட்டுப்பாட்டு அறையில் தெரிவிக்கப்படும் புகார்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சரிசெய்யப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறோம். மழை நீர் தேங்கிய 49 இடங்களிலும் நீர் அகற்றப்பட்டுவிட்டது. 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தின்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பாராட்டைப் பெற்றது" என்று கூறினார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வியால் ஆவேசமடைந்த அமைச்சர் வேலுமணி, அமெரிக்கா, லண்டனில் தேங்கும் மழைநீர்கூட சென்னையில் தேங்கவில்லை. அமெரிக்கா, லண்டனில் எடுக்கப்பட்டதைவிட சென்னையில் சிறப்பாக நடவடிக்கை மேற்கொண்டோம் என்று கூறினார். செய்தியாளர்கள் தொடர்ந்து, மழை தொடர்பான புகார்களை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கமுடியவில்லை என்று கேள்வி எழுப்பினர். அப்போது குறுக்கிட்ட மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. தப்பு நடந்தமாதிரி திசை திருப்புகிறார்கள். இரண்டு மணி நேரத்தில் இந்த பிரச்னை சரி செய்யப்பட்டு விடும்" என்றார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அப்போது, நீங்க கேட்ட கேள்விக்கு நான் பதில் அளித்துவிட்டேன். நான் சொல்கிறதை கேளுங்கள் என்றார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தனர். அப்போது அருகில் இருந்த அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் 95 சதவிகிதம் பணிகள் நடைபெற்றுள்ளது. என்னென்ன பணிகள் நடந்திருக்கிறது என்பது குறித்து உங்களுக்கு வீடியோ அனுப்பிவைக்கிறோம். ஆனால், ஆங்காங்கே ஒண்ணு இரண்டு இருக்கிறதை நீங்கள் படம்படித்து அதை பிரதானமாக காட்டக்கூடாது" என்று காட்டமாக கூறினார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் வேலுமணி தனது கையில் வைத்திருந்த மாநகராட்சியின் அறிக்கையை படித்துக்கொண்டே இருந்தார். அமைச்சர்களின் இந்த செய்தியாளர்கள் சந்திப்பு கடும் சலசலப்பு மத்தியில் முடிவடைந்தது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
அமெரிக்கா, லண்டனில் தேங்கும் மழைநீர்கூட சென்னையில் தேங்கவில்லை! செய்தியாளர்களிடம் கலகலத்த அமைச்சர்
TAGS :
COMMENTS