[ad_1]





தொன்மை வாய்ந்த தமிழர் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் ஏராளமான இலக்கிய சான்றுகள் உள்ளன. இத்தகைய இலக்கிய சான்றுகளை  உரிய தொல்லியல் சான்றுகளுடன் ஆவணப்படுத்தி உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட இருப்பதாக தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

 ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளம் கிராமத்தில் தமிழக தொல்லியல் துறையினர் மேற்கொண்ட அகழாய்வில் கீழடியை மிஞ்சும் வகையிலான அரிய தொல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த மாதம் நிறைவடைந்த இப்பணிகளின் போது சேகரிக்கப்பட்ட தொல் பொருள்களை தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டனர். 




அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், ''தமிழக அரசு தமிழ் கலாசாரத்தை பாதுகாப்பதிலும், தமிழ் மொழி பெருமையினை ஆவணப்படுத்துவதிலும் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொசஸ்தலை துவங்கி தாமிரபரணி வரையிலான 12 முகத்துவாரங்களில் இதுவரை ஆதிச்சநல்லூர், அழகன்குளம், கீழடி என 39 அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் அழகன்குளத்தில் மட்டும் 8 முறை அகழாய்வு பணிகள் நடந்துள்ளன. இதில் 13 ஆயிரம் தொல் பொருள்கள் கண்டெடுக்கபட்டுள்ளன. இவற்றின் மூலம் பண்டைய தமிழ் மக்கள் பயன்படுத்திய சங்கு வளையல்கள், கல்மணிகள், சுடு மண்ணால் செய்யப்பட்ட பொருள்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த ஓடுகள், நாணயங்கள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன. இதன் மூலம் உலகில் சங்கினை அரியும் தொழில்  கூடம் இங்கு இருந்தது தெரியவந்துள்ளது. மண்பாண்டங்களில் பொறிக்கப்பட்ட கீரீஸ், ரோம் எழுத்துக்கள் மூலம் ரோமானியர்கள் உலவிய பகுதியாக அழகன்குளம் அறியப்பட்டுள்ளது. முன்னேறிய நாகரீக சமூகமாக வாழ்ந்த தமிழர்களின் நாகரீகம் அறியப்பட்ட இடமாகவும் திகழ்கிறது. இதுவரை நடந்த அகழாய்வு பணிகளில் கிடைத்த அரிய பொருள்களை கொண்ட 35 அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கலை, பண்பாடு, அரசியல், வரலாறு என பல துறைகளிலும் முதன்மையாக திகழுவது தமிழர்களின் பண்டைய கால வரலாறு.


 

இவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து உலகத்தரம் வாய்ந்த தொல்லியல் அருங்காட்சியகம் சென்னையில் ரூ.21 கோடி செலவில் அமைப்பதற்கான பணிகள் துவங்க உள்ளன. அருங்காட்சியங்கள் மாணவர்களுக்கான அறிவு ஊட்டும் மையங்களாக உருவாக்கப்படும். மேலும் உலக வங்கி உதவியுடன் 14 இடங்களில் அருங்காட்சியம் அமைக்கப்படும். ஆதிச்சநல்லூர் அகழாய்வு பற்றிய ஆய்வினை ஆராய்ச்சி குழு மூலம் வெளிகொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.


இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் நடராஜன், மத்திய தொல்லியல்துறை துணை கண்காணிப்பாளர் ஶ்ரீராம், துணை இயக்குநர் சிவானந்தம், அழகன்குளம் அகழாய்வு இயக்குநர் பாஸ்கர், செயற்பொறியாளர் தங்கவேல், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்