[ad_1]



உத்தரப்பிரதேச மாநிலத்தைத் தொடர்ந்து இப்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த மூன்று நாள்களில் 18-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் தொடர் இறப்புக்கான காரணம் பற்றி குஜராத் மாநில அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.


கடந்த ஆகஸ்ட் மாதத்தில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகளில் 290-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். கோரக்பூரில் உள்ள அரசுக்குச் சொந்தமான பாபா ராகவ்தாஸ் மருத்துவமனையில் (B.R.D) ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரிழப்பு தொடர்கதையானது. 

 

இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என்னவென்று விசாரித்தபோது கோரக்பூர் மாவட்ட ஆட்சியர் ராஜீவ் ரவ்டேலா கூறுகையில், "மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கும் நிறுவனத்திற்கு கட்டணப் பாக்கியைச் செலுத்தாததால், ஆக்சிஜன் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், விநியோகஸ்தர்களிடம் சிலிண்டர்கள் வழங்குவதை நிறுத்த வேண்டாம் என்று கூறியும், அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை" என்று தெரிவித்தார். விநியோகஸ்தர்களுக்கு பி.ஆர்.டி மருத்துவமனை, 69 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டியிருந்த காரணத்தால், அந்த நிறுவனம் விநியோகத்தை நிறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகின. 

 



 

எனினும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரிழந்தன என்ற தகவலை மருத்துவமனையின் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் ஆர்.எஸ்.சுக்லா முற்றிலும் மறுத்தார். "அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆக்ஸிஜன் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தோம். பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொண்டோம். குழந்தைகளின் இறப்பு எதுவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்படவில்லை" என்றார் அவர். உத்தரப்பிரதேச மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சித்தார்த் நாத்தும் இதே கருத்தை தெரிவித்தார். "ஊடகங்கள் கூறுவது போல எங்களுக்கு எந்த அறிக்கையும் வரவில்லை. விசாரணை அறிக்கை வெளியான பின்னரே, குழந்தைகள் மரணத்திற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியவரும்" என்றார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் மரணம் அடைந்த சம்பவம் நடைபெற்று இரண்டு மாதங்கள்கூட முடிவடையாத நிலையில், இப்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், மூன்றே நாள்களில் 18-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

"அகமதாபாத் மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளில் நான்கு குழந்தைகள் அதே மருத்துவமனையில் பிறந்தவை. மற்ற குழந்தைகள் எல்லாம் மாநிலத்தின் வெவ்வேறு இடங்களில் பிறந்து, மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்யப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவை. உடல்நலக் குறைவோடு பிறந்தவை, குறைவான எடையுடன் பிறந்த குழந்தைகள்தான் (1.1 கிலோ) உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்தக் குழந்தைகள் மூச்சுவிடுவதில் சிரமம், நுரையீரல் பிரச்னைகளுக்காக சிகிச்சை பெற்று வந்தன. மேலும், இந்த மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள் பலவீனமாகவே உள்ளனர். எனவே, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அகமதாபாத் மருத்துவமனையில் சராசரியாக ஐந்து முதல் ஆறு பச்சிளம் குழந்தைகள் உயிரிழக்கின்றன" என குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது.

அகமதாபாத் குழந்தைகள் உயிரிழப்புச் சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று, குஜராத் முதல்வர் பதவி விலக வேண்டும் என்று அந்த மாநில காங்கிரஸ் தலைவர் ஜெய்வீர் செர்ஜில் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பி.ஜே.பி அரசின் கவனக்குறைவால்தான் குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பல குடும்பங்கள், குழந்தைகளை இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கின்றன" என்றார்.

 


இந்த இரு மாநிலங்களிலும் நிகழ்ந்துள்ள பச்சிளம் குழந்தைகளின் மரணங்களுக்கு அம்மாநில அரசுகள் உரிய பதிலை அளிக்காமல், மெத்தனப்போக்குடன் உள்ளன. குழந்தைகளைப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கும் மக்களுக்கு இந்த அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?