[ad_1]

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக எடப்பாடி அணியினரின் நடவடிக்கை குறித்து விளக்கமளித்தார்.





அவர், `இரட்டை இலைச் சின்னம்  தொடர்பான வழக்கில், அனைத்து ஆவணங்களும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது. பொதுக்குழு முடிவின்படியும், அ.தி.மு.க.வின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் ஒன்றுபட்டுள்ள நிலையில் 100 சதவிகிதம் ஆவணங்கள் சமர்பித்துள்ள நிலையில் இரட்டை இலைச் சின்னம் எங்களுக்குத்தான் கிடைக்கும். அ.தி.மு.க.வை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றும் ஜெயலலிதாவை தன் அரசியல் எதிரியாக கருதிய தி.மு.க.வுடன் கைகோர்த்து கட்சியையும் ஆட்சியையும் அழிக்க நினைக்கிறார் தினகரன். அவர் நினைப்பது நடக்காது. தேர்தல் ஆணையத்திடம் தினகரன் தரப்பு அவர்களது வாதத்தை வைத்துள்ளனர். வரும் 1-ம் தேதி எங்கள் தரப்பு வாதத்தை முன்வைப்போம். அரசு கடந்த முறை ஏற்பட்ட வெள்ள பாதிப்பை வெற்றிகரமாக சமாளித்ததைப் போல தற்போது பருவமழையின் போது நடக்கும் அத்தனையையும் சமாளிக்கும். மழை ஒரே நாளில் கொட்டித்தீர்ப்பதால், தண்ணீர் தேக்கம் என்பது இருக்கும். தண்ணீர் வடிவதற்கான நடவடிக்கைகள் போரக்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆர்.கே. நகர் தொகுதியில் யார் வேட்பாளர் என்பதை ஆட்சி மன்றகுழுதான் முடிவு செய்யும்' என்றவரிடம், சர்க்கரை மானியம் ரத்து குறித்து கேட்டபோது, `சர்க்கரை மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்' என்று பதிலளித்தார்.