[ad_1]

 




''ஜி.எஸ்.டி மூலம் புதிய வணிக கலாச்சாரம் உருவாகி வருகிறது. தொலைநோக்கில் பார்க்கும் போது ஜி.எஸ்.டி மூலம் நுகர்வோர்களுக்கு நிறைய பலன் கிடைக்கும்' என்று நுகர்வோர் பாதுகாப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கில் பிரதமர் மோடி கூறினார். 

டெல்லியில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அவர் பேசுகையில், '' பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் வணிகம், கலாச்சாரம், மதம் போன்ற கூறுகளால் ஒருவரோடு ஒருவர் இணைந்திருக்கிறோம்.  நாடுகளுக்கிடையில் பொருளாதாரம் மட்டுமல்ல, பாரம்பரியமும் பகிரப்பட்டிருப்பதின் சின்னமாகவே இங்கே வீற்றிருக்கிறோம்.  இந்தியாவின் நிர்வாகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு என்பது வேதகாலத்தில் இருந்தே முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டிருக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அதர்வண வேதத்தில், "தரம் மற்றும் அளவீட்டில் யாரும் ஏமாற்றக் கூடாது," என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.  

இந்த பழங்கால ஆவணங்கள் நுகர்வோர் பாதுகாப்பின் விதிமுறைகளையும், முறைகேடுகளில் ஈடுபடும் வணிகர்களுக்கு தரப்படவேண்டிய தண்டனைகளையும் குறிப்பிடுகிறது.  இந்தியாவில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கவுடில்யரின் காலத்தில் வணிகம் எப்படி நடைபெற வேண்டும் என்றும் நுகர்வோரின் பாதுகாப்பு எப்படி உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதையும் வகுத்திருந்தனர்.  கவுடில்யரின் நிர்வாகத்தில் இருந்த பதவிகளில் இன்றைய வணிக இயக்குனர், தர ஆய்வாளர் பதவிகளுக்கு நிகரான பதவிகள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.  நாட்டின் தேவைகளுக்கும், வணிக நடைமுறைகளுக்கும் ஏற்ற புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்கும் வேலையில் இன்று ஈடுபட்டிருக்கிறோம். 

சமீபத்தில் இந்தியா அமல்படுத்தியுள்ள சரக்கு மற்றும் சேவை வரியின் (GST) மூலம் ஏராளமான மறைமுக வரிகள் ரத்துசெய்யப்பட்டுள்ளது.  இதன்மூலம் எவ்வளவு வரி மாநில அரசுக்கும், எவ்வளவு வரி மத்திய அரசுக்கும் கட்டியிருக்கிறோம் என்பது நுகர்வோர்க்கு தெரியும்.  சரக்கு லாரிகள் மாநில எல்லைகளில் வரிசையாக நிற்பது இப்போது தேவைப்படவில்லை. ஜி.எஸ்டி.யின் மூலம் புதிய வணிக கலாச்சாரம் உருவாகி வருகிறது.  தொலைநோக்கில் பார்க்கும்போது இதன்மூலம் நுகர்வோர்கள் மிகுந்த பலனை அடைய இருக்கிறார்கள். மிகவும் வெளிப்படையான அமைப்பு என்பதால் நுகர்வோரை ஏமாற்றும் வழிகள் இதில் எதுவும் இல்லை. ஜி.எஸ்.டி-யின் மூலம் விற்பனையாளர்களிடையே கூடியுள்ள போட்டி மனப்பான்மை விலை குறைப்பை ஏற்படுத்தும்.  இதன்மூலம் ஏழைகளும், நடுத்தரமக்களும் பயனடைவார்கள்.

நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும் மிகுந்த பொருளாதார பலன்களை அளித்துள்ளது.  மற்றபடி சென்ற ஆட்சியில் பணவீக்கம் அதிகரித்து வந்த அதே வேகத்தில் இப்போதும் தொடர்ந்திருக்குமேயானால் ஒவ்வொரு குடிமகனையும் அது நேரடியாக பாதித்திருக்கும்.  உலகமயமாக்கல் அதிகரித்துவரும் இச்சூழலில் உலகமே ஒரு பெரும் சந்தையாக மாறி வருவதையும் நாம் உணர வேண்டும்.  அதனால் ஒவ்வொருவரின் அனுபவத்தில் இருந்தும் மற்றவர் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது.  இதன்மூலம் பொதுவான புரிதலை ஏற்படுத்தி, நுகர்வோர் நலன் சார்ந்து இயங்கும் பிராந்திய கூட்டணியை இதுபோன்ற நிகழ்ச்சிகளின் மூலம் ஏற்படுத்திக்கொள்ள முடியும்.


 நாம், உணர்வுபூர்வமான உறவை பலப்படுத்துவதின் மூலம், நம்முள் பொதுவாக இருக்கும் கலாச்சார மற்றும் பாரம்பரிய உறவையும் நம்மால் பலப்படுத்திக்கொள்ள முடியும்.  மற்ற கலாச்சாரங்களை மதிக்கும் அதே சமயம், நம் கலாச்சாரத்தில் பெருமை கொள்வதும் நம் பாரம்பரியத்தில் ஒன்று.  பல நூற்றாண்டுகளாக ஒருவரிடம் இருந்து ஒருவர் வணிகத்தையும், நுகர்வோர் பாதுகாப்பையும் நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம்'' என்று பேசினார்.