
[ad_1]

மதுரை முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்ட அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் கலந்துகொண்டு லேப்டாப் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மதுரை காளவாசல் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகளைக் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்ராஜூ மாணவ, மாணவியருக்கு வழங்கி மேடையில் பேசினார். "ஜெயலலிதா மாணவர்களுக்காகத் தன் வாழ்க்கையையே தியாகம் செய்து பல திட்டங்களைக் கொண்டுவந்தார். அதன் விளைவாகத் தமிழகம் கல்வியில் கொடிகட்டி பறக்கிறது. 75 ஆயிரம் ஆசிரியர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்துள்ளது. மாணவர்கள் பறந்த மனப்பான்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும். உங்களால்தான் நாடு வல்லரசு ஆக முடியும். தூய்மையான மாவட்டமாக மதுரையை உருவாக்க மாணவர்கள் தொண்டுப் பணிகள் செய்ய வேண்டும். வரும் வழியில் ஏதேனும் தேவையற்ற பொருள்கள் கிடந்தால் பையில் எடுத்து வந்து குப்பைத் தொட்டியில் போட வேண்டும். சுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார் .
பின்னர் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்ததாவது இந்த அரசு நான்காண்டு காலம் தொடரும், மத்திய அரசு மானியத்தை நிறுத்தியதால் விலைவாசி அதிகமாகியுள்ளது. ஆனாலும், தனியார் கடைகளை விட குறைவான விலைக்குத்தான் அரசு பொருள்களை வழங்குகிறது. அதனால் இந்த விலை ஏற்றம் மக்களை அதிக அளவு பாதிக்காது. கமல் களத்தில் இறங்கியது குறித்து நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. அவருக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. பொங்கலுக்குள் ஆட்சி முடியும் எனச் சொல்லும் தனிப்பட்ட நபர்களுக்கு நான் பதில் சொல்ல முடியாது. பருவ மழை பாதிப்பு ஏற்படாதபடி பயிர்கள், தானியங்கள் உரம் உள்ளிட்டவை கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. ரேசன் கடைகளிலும் போதிய இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மக்கள் அச்சப்பட வேண்டாம் எனத் தெரிவித்தார் .
COMMENTS