[ad_1]

தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைப்பயிற்சி செய்வோருக்கான கட்டண வசூலைக் கண்டித்து, மைதானத்தில் தூத்துக்குடி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., கீதாஜீவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 




ஆர்ப்பாட்டத்தில் பேசிய தி.மு.க எம்.எல்.ஏ., கீதாஜீவன், ‘’தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானமான தருவை மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் விளையாட்டு மைதானம்,  நடைப்பயிற்சித் தளம், விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் பயிற்சி அரங்கம் ஆகியவை உள்ளன.  இந்த மைதானத்தில்  விளையாட்டுத் தளம் அமைக்க, மறைந்த முன்னாள் தி.மு.க மாவட்டச் செயலாளர்,  என் தந்தை பெரியசாமி நகரசபைத் தலைவராக இருந்தபோது தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இந்த மைதானத்தில் சிறப்பு பொருட்காட்சி நடத்தி, அதன்மூலம் கிடைத்த ரூ.6 லட்சம் நிதியை அரசுக்கு அளித்தார்கள். அதன்பிறகுதான் மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டது.  இது, தூத்துக்குடி மக்களின் பங்களிப்பு, விளையாட்டு ஆர்வலர்கள், சமூக நிறுவனங்களின் பங்களிப்போடு  உருவாக்கப்பட்ட ஒரு விளையாட்டு அரங்கம்.



இந்த மைதானத்தில், தற்போது அமைக்கப்பட்டுள்ள நடைப்பயிற்சித் தளமும் பொதுமக்களின் பங்களிப்போடுதான் அமைக்கப்பட்டது. தினமும் 500-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த நடைப்பயிற்சித் தளத்தைப் பயன்படுத்திவருகிறார்கள். இந்நிலையில், நடைப்பயிற்சி மேற்கொள்வோரிடம் நபர் ஒன்றுக்கு மாதக் கட்டணமாக ரூ.250 வசூலிக்கப்படும் என அரசால் வாய்மொழி உத்தரவு போடப்பட்டுள்ளது. இது நடைப்பயிற்சி செய்வோருக்கு மட்டுமல்லாமல் பல விளையாட்டுப் பயிற்சிகளுக்கும் கட்டணம் நிர்ணயித்து, மைதானத்தின் வாசலில் போர்டு வைக்கப்பட்டுள்ளது. விளையாட்டில் ஆர்வமுள்ள, திறமையுள்ள ஏழை மாணவ, மாணவிகள் இங்கு பயிற்சிபெற்று வருவதால், இந்தக் கட்டண அறிவிப்பு மன வேதனையை அளித்துள்ளது. இதனால், அவர்களது எதிர்காலமும் வேலைவாய்ப்பும் கேள்விக்குறியாகிவிடும். 

விளையாட்டில் சிறந்து விளங்கும் திறமையான மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டிய அரசே, இப்படி ஒவ்வொன்றுக்கும் கட்டணம் வசூலித்தால் என்ன ஆகும்?  இந்த நடைப்பயிற்சித் தளத்தை வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் எனப் பலதரப்பட்டவர்களும் பயன்படுத்துகிறார்கள். அவர்களது உடைமைக்கும் அணிகலன்களுக்கும் பாதுகாப்பான இடமாக இந்த மைதானம் உள்ளது. நகரின் மையப்பகுதியில் இருப்பதால், அனைத்து தரப்பினரும் வந்துசெல்ல சுலபமாக அமைகிறது. எனவே, அரசு இந்த கட்டணம் வசூலிக்கும் திட்டத்தைத்  திரும்பப் பெற வேண்டும். மக்கள் பங்களிப்பில் செயல்பட்டுவரும் இந்த மைதானத்தைப் பயன்படுத்த, மக்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? மக்களாலான அரசு எனச் சொல்லும் அ.தி.மு.க அரசு, இந்தக் கட்டண வசூலிப்பை நிறுத்தினால் என்ன?’’ என்று பேசினார்.


ஆர்ப்பாட்டத்தில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.