[ad_1]


                                   

வடகிழக்குப் பருவமழை இந்தாண்டு 111 விழுக்காடு அதிகம் பொழிய வாய்ப்பு உள்ளதாக வந்துள்ள தகவலால், தமிழக அரசு அதிர்ந்துபோய் தூக்க முகத்தைத் தற்போது கழுவ ஆரம்பித்திருக்கிறது. ஆம், இரண்டாண்டுகள் ஓடியதே தெரியாமல்    தூங்கிய வகையில் 2015 டூ 2017 வரை 720 இரவுகளைப் மிகப்பெரும் தூக்கத்தில் கழித்துவிட்டது அரசு. இன்னும் சொல்லப்போனால், இந்தாண்டு கனமழை இதுவரை சென்னையில் பெய்யத்தொடங்கவில்லை. ஆனால், சேதமடைந்து, நொறுங்கிக் கிடக்கும் பெரும்பாலான சாலைகள், மழைவந்தால் ஏற்படக் கூடிய ஆபத்தின் வடிவத்தை உணர்த்திக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில்தான் சென்னையை இந்தாண்டு மழைப்பொழிவு பாதிப்பில் இருந்து காப்பாற்ற மாநகராட்சியும், காவல்துறையும் முன்னேற்பாடுகள் குறித்த கவலையுடன் களமிறங்கியுள்ளன.  


 

                                                   

வடசென்னையில் மோசமடைந்த சாலைகள் 

வடசென்னைப் பகுதிதான் உண்மையில் மிக மோசமான சாலைகளைக் கொண்டது. அதிலும் குறிப்பாக திருவொற்றியூர் பகுதியைச் சொல்லவே தேவையில்லை. கடந்த ஓராண்டிற்கு முன்னர்தான், சென்னை பெருநகர மாநகராட்சியில் இப்பகுதி இணைந்தது. அதுவரை, நகராட்சித் தலைவர், ஆணையர், தொகுதி எம்.எல்.ஏ. என்று பல அதிகார மையங்களைக் கொண்டு திகழ்ந்தது. ஆனால், இந்தப் பகுதி மக்களுக்கான அடிப்படை வசதி என்னவோ இதுவரை செய்துதரப்படவில்லை. தற்போது திருவொற்றியூர் பகுதியில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெறுவதால், மேலும் மோசம் அடைந்துள்ளது. இந்தப் பணிகளால் திருவொற்றியூர் பகுதி முடமாகிக் கிடக்கிறது என்றே சொல்லலாம். ஆங்காங்கே சாலைகளில் காணப்படும் பள்ளங்களில் விழுந்து, மக்கள் கை, கால்களை முடமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். விபத்துகளைத் தடுக்க அவற்றில் கற்களைக் கொண்டு காவல்துறையினர் நிரப்புவதைப் பார்க்கலாம். திருவொற்றியூர் காவல்நிலைய தலைமைக்காவலர் மாரியப்பன் மற்றும் போலீஸார், கற்களைக் கொண்டுவந்து அப்பகுதியில் இருந்த பெரியதொரு பள்ளத்தை  மூடிக் கொண்டிருந்தனர். 

பெருமழையில் கோட்டை விட்ட போலீஸார்!

சென்னையில் 2015-ல் பெய்த பெருமழை, வெள்ளத்தின்போது, அதிகளவிலான தன்னார்வலர்கள் வீதியில் இறங்கி உதவினர். அப்போது, சென்னை புறநகர்ப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர்கள், படகுகள் மூலம், உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஆட்சியாளர்களின் அலட்சியத்தால், மழைநீர் வெள்ளக்காடாக மாறியது. கோடிக்கணக்கில் வர்த்தகப் பரிவர்த்தனை செய்தவரையும் உணவுப் பொட்டலங்களுக்காகக் கையேந்த வைத்து விட்டது. அந்தப் பாதிப்புகளின் போது, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெறும் ஆயிரம் போலீஸாரே மீட்புப் பணிகளில் இருந்தனர். போதிய திட்டமிடல் இல்லாததே இதற்குக் காரணம் என்று பின்னர் தெரியவந்தது. இஸ்லாமிய அமைப்புகள், தன்னார்வலர்கள், இடதுசாரிக் கட்சியினர், துணை ராணுவப்படையினர், பேரிடர் மீட்புக் குழுவினர் உள்ளிட்டோர் மீட்புக்குழுவில் போலீஸார் பற்றாக்குறையை ஈடுசெய்தனர். 

 

                                                 

மழை எச்சரிக்கை! 

ஜூன் தொடங்கி செப்டம்பர் மாதம்வரை பெய்யும் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், கேரளா, கடலோர கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய பகுதிகளில் மழைப்பொழிவு அதிகம் இருக்கும். இந்தக் கால கட்டத்தில் தமிழகத்திற்கு மழை குறைந்த அளவே பெய்யும். ஆனால், "இந்த ஆண்டு இயல்பான அளவை விட 31 விழுக்காடு அதிகமாக தென்மேற்குப் பருவமழை தமிழகத்துக்கு கிடைத்துள்ளது" என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை காலத்தில், ஆண்டு மழைப்பொழிவில் 48 விழுக்காடு மழையைப் தமிழகம் பெறுவது வழக்கம்.  

2015-ம் ஆண்டுக்குப் பின், கடந்த ஆண்டு அதாவது 2016-ல் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இயல்பான அளவை விட 62 சதவீதம் குறைவாக பெய்தது. இந்தாண்டு வடகிழக்குப் பருவமழை, தமிழகம் தெற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள்கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் 89 முதல் 111 விழுக்காடுவரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மைய தகவல்கள் தெரிவித்துள்ளதால், அரசு அதிகாரிகள் அதிர்ந்து போய் உள்ளனர்.  2015-ம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தை இப்போது நினைத்தாலும் மனதுக்குள் திகில் ஏற்படுகிறது. அதேபோன்று மீண்டும் கனமழை பெய்து, வெள்ளம் சூழ்ந்தால், என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யலாம்? மக்களை எப்படிக் காப்பாற்றலாம் என்பது பற்றி பல்வேறு துறைகளின் அதிகாரிகள், அமைச்சர்கள் இப்போதே ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.  

கூட்டம் பயன் தருமா?

வடகிழக்குப் பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "சென்னை மாநகராட்சியில், அனைத்துதுறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற ஏதுவாக 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகள்  அமைக்கப்பட்டுள்ளன. வடகிழக்குப் பருவமழை தொடர்பான புகார்களை சென்னை மாநகராட்சியின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1913 மூலமும், கட்டுப்பாட்டு அறைக்கு 044-25367823, 25384965, 25383694, 25619206 என்ற தொலைபேசி எண்களிலும், வாட்ஸ்-அப் தகவல்களை 9445477662 மற்றும் 9445477205 என்ற செல்போன் எண்கள் மூலமும் பொதுமக்கள் தெரிவிக்கலாம். மழைபாதிப்புகள் தொடர்பாக பெறப்படும் தகவல்கள் மீது உடனுக்குடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாநகராட்சி வசமுள்ள 1,096 வாக்கி-டாக்கிகள் மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமுள்ள 22 சுரங்கப்பாதைகள் மற்றும் தண்ணீர் தேங்கும் இடங்களில் 60 உயர் அழுத்த டீசல் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 15 மண்டலங்களிலும் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை மீட்க 109 மீட்புப் படகுகளும், அவர்கள் தங்குவதற்கு 176 நிவாரண முகாம்களும், ஒரே நேரத்தில் 1500 பேருக்கு உணவு தயாரிக்க நான்கு பொதுசமையல் கூடங்களும், மருத்துவ சிகிச்சைக்கு 44 நிலையான மற்றும் நடமாடும் மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் உள்ளன" என்றார்.

 

                                                       

போலீஸ் என்ன செய்யப் போகிறது? 

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் பேரிடர் குறித்த ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில், "மழைக்கு முன், மழையின் போது, மழைநின்ற பிறகு என மூன்று காலகட்டங்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள், துறைவாரியான ஊழியர்கள் இணைந்து எப்படி பணியாற்றுவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மழை தொடர்பான புகார் மற்றும் தகவல்களைப் பெற ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை அமைப்பது, தாழ்வான பகுதிகள், பாழடைந்த கட்டிடங்கள் பற்றிய விவரங்களைச் சேகரித்து  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்தும் திட்டமிடப்பட்டது. மீட்புப் பணியில் ஏதாவதொரு பாதிப்பு ஏற்பட்டால், மக்கள் போலீஸாரையே அதிகமாகக் குறைகூறுவார்கள். 

மழை, வெள்ளப் பாதிப்புகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும், மாநிலம் முழுவதும் இந்த இரண்டாண்டுகளில் குளங்கள் மற்றும் கண்மாய்களை சரி செய்திருக்கலாம், கடல் நீரையே எதிர்கொண்டு உள்வாங்கும் ஆற்றல் கொண்டதாகக் கருதப்படும் ஜீவ நதியான கூவம் ஆற்றின் கரைகளைப் பலப்படுத்தி சீரமைத்திருக்கலாம். பக்கிங்ஹாம், கேப்டன், ஓட்டேரி, அடையாறு போன்ற எண்ணற்ற ஆறுகள் மற்றும் கால்வாய்களின் கரைகளை செப்பனிட்டு பராமரித்திருக்கலாம். குறைந்தபட்சம் கால்வாய்க் கரைகளையாவது தூர்வாரியிருக்கலாம். தரமணி, பள்ளிக்கரணை, தாம்பரம், வேளச்சேரி, மடிப்பாக்கம், நெற்குன்றம் வரை இருந்த நீர்நிலைகள் தற்போது வீட்டு மனைகளாகவும், வீடுகளாகவும் மாறிவிட்டன. அவற்றில் ஓரளவாவது தடுத்திருக்கலாம். ஆனால், இவற்றையெல்லாம் சீரமைக்கும் அல்லது தட்டிக்கேட்கும் அதிகாரம் கரைவேட்டிகளிடம் மட்டுமே இருக்கிறது. எதிர்த்துக் குரல் கொடுக்கும் மக்களைக் கைதுசெய்ய உத்தரவு போடும் அதிகாரமும் கரைவேட்டிகளிடமே உள்ளது. எனினும் அவர்கள் இடும் கட்டளைகளை நிறைவேற்றும் பொறுப்பு மட்டுமே போலீஸாரிடம் இருக்கிறது. ஆனால், மக்கள் கரைவேட்டிகளின் செயல்பாடற்ற நிலையை விட்டுவிட்டு, போலீஸாரைச் சாடுகிறார்கள். அது, அவர்கள் கரைவேட்டிகளின் அடிகளை மறந்து விடுவதையே காட்டுகிறது. 


சரி, இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையை எப்படி எதிர்கொண்டு, மக்களை பாதிப்பின்றி காப்பாற்றுகிறார்கள் என்பதைப் பார்ப்போம். மீண்டும் ஒருமுறை பெருவெள்ளம் ஏற்படுமானால், அது சென்னையைக் கடுமையாகப் பாதிக்கும் என்பது மட்டும் உறுதி... அரசு மற்றும் மாநகராட்சியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குறித்தநேரத்தில், திட்டமிட்டபடி செயல்பாட்டிற்கு வந்தால், மக்கள் பாதுகாக்கப்படுவார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்...