[ad_1]

 

                                 


 ஒருநாள் மழைக்கே ஆட்டம் கண்டிருக்கிறது, தலைநகர் சென்னை.  பேரிடர் மீட்பு மையக் குழுக்கள், போலீஸ், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.  தடையின்றி நீரோட்டத்துக்கு வாய்ப்பிருந்தால் ஒருவாரம் மழை பெய்தாலும் கவலை இல்லை. நீரோட்டத்துக்கு வாய்ப்பில்லை என்ற நிலைதான், கொண்டாட வேண்டிய மழையைப் பார்த்து மக்களைப் பயப்பட வைத்திருக்கிறது. வி.ஐ.பி. தொகுதி என்று சொல்லப்பட்டு வந்த சென்னை ஆர்.கே.நகர் தொகுதியை எடுத்துக்கொண்டால், எழில்நகர், நேதாஜிநகர், துர்காதேவி நகர், கொடுங்கையூர், மூப்பனார் நகர், பணக்கார நகர், சுண்ணாம்புக் கால்வாய் போன்ற பகுதிகள் தாழ்வான பகுதி. ஒருமணி நேர மழைக்கே தாங்காத அளவுக்கு இந்தப் பகுதிகள், பள்ளம் நிறைந்ததாக இருக்கிறது. சிமென்ட் சாலையாகப் போட்டு சாலையின் உயரத்தைக் கூட்டிக் கொண்டே போவதால் பள்ளத்தில் இருக்கும் மக்கள் இன்னும் பள்ளத்துக்குள் மூழ்க, சாலை சர்வீஸ் என்ற பெயரில், இங்கே 'சதி' தான் நடந்திருக்கிறது. 


                                   

 உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததே இந்தச் சீரழிவுக்குக் காரணம் என்று தி.மு.க.வினர் குற்றஞ்சாட்டுகின்றனர். அதில் உண்மை இருப்பது போல், உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் இருந்த போதும் ஒன்றும் நடக்கவில்லை என்பதும் உண்மை. புதிதாகக் கட்டடம் கட்டுகிறவர், மூன்று அடுக்கிற்கு மேலே கட்டடத்தை உயர்த்தினால், அதைத் தடுத்து நிறுத்தி, ' கட்டடம் எழுப்ப உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா? ' என்று கேட்ட கவுன்சிலர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆர்.கே.நகர்த் தொகுதியில் மட்டுமல்ல, சென்னை முழுவதும் இதுதான் நிலைமை. மாறாக, கட்டட உரிமையாளர் கொடுப்பதை விடக் கூடுதலாகக் கேட்டு வாங்கிக்கொண்டு, கட்டடத்தை இன்னும் நான்கைந்து அடுக்கு உயர்த்திக் கொள்ள தாராளமாய் அனுமதி வழங்கியதும், இதே கவுன்சிலர்கள்தான். பொதுமக்களுக்கு, வாங்கியவர் யார் என்று தெரியும். கவுன்சிலர்களுக்கு 'கொடுத்தது' யார் என்றும் தெரியும். மழைவெள்ளத்துக்கு ஆறுதல் சொல்ல வந்தால், பொதுமக்கள் அந்த மழை நீரிலேயே பிடித்து அமுக்கி விடுவார்கள் என்ற பயத்தாலோ என்னவோ சென்னையின் பல பகுதிகளுக்கு 'ஸ்பாட் விசிட்'  அடிக்காமல் மாஜி. கவுன்சிலர்கள் இதனால், வீட்டுக்குள்ளேயே முடங்கினர். 


                       

                             


ஆர்.கே.நகரைப் பொறுத்தவரை, 'மழைநீரை உடனடியாக அகற்றாதது ஏன்?' என்று அதிகாரிகளை விரட்டி, விரட்டி வேலை வாங்கிக் கொண்டிருக்கிறார், தி.மு.க.வின் பகுதிச் செயலாளரான மருதுகணேஷ். இன்னொரு பக்கம், ஜெ.பேரவை மாவட்டச் செயலாளரான ஆர்.எஸ்.ராஜேஷ்,  இதே வேலையைச் செய்து கொண்டிருக்கிறார். கோவிந்தசாமி நகர், எம்.ஜி.ஆர். தெரு போன்ற இடங்களில் வீடுகளில் கழிவு நீர் புகுந்துவிட சாலைமறியல் செய்யும் நிலைக்குப் பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மறியல் நடந்த பகுதிக்கு வந்த மாநகராட்சி அதிகாரிக்கும் பொதுமக்களுக்கும் இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. சென்னை வியாசர்பாடி மேம்பாலத்தின் கீழே நிரம்பிய வெள்ளத்தால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு விட்டதால் போலீஸார், தீயணைப்புத் துறையினர் அங்கு சென்றனர். போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமிஷனர்கள் ஹெச்.எம்.ஜெயராம், கே.பெரியய்யா, இணை கமிஷனர் நஜ்முல்ஹோடா, துணை கமிஷனர் ஷியாமளாதேவி மற்றும் ஏராளமான போலீஸார், தீயணைப்புத் துறையினருடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
 போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் இவ்வளவுதான் செய்ய முடியும். அதிகாரத்தில் இருப்பவர்கள்தான் முழுமையான தீர்வுக்கு வழிவகை காட்ட முடியும்...