[ad_1]
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக, வைகை அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில், முதல்போக சாகுபடிக்காக வைகை அணையிலிருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. துணைமுதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் செல்லூர்ராஜு, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் மலர் தூவி, அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட்டனர். இந்நிகழ்ச்சியில், மதுரை கலெக்டர் வீரராகவராவ், தேனி கலெக்டர் ந.வெங்கடாசலம், தேனி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நாள் ஒன்றுக்கு 900 கன அடி வீதம் 120 நாள்களுக்கு 6,739 மில்லியன் கனஅடி தண்ணீர் இன்றுமுதல் திறக்கப்படும். இதன்மூலம் திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள 45,041 ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும். கூடுதலாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாய பாசனப் பரப்பிற்கும் தண்ணீர் கிடைக்கும். கடந்த முறை போதிய மழை இல்லாததால், பயிர் சாகுபடி செய்ய முடியாமல் சிரமப்பட்ட விவசாயிகள், தற்போது மகிழ்ச்சியடைந்துள்ளனர். நினைத்ததுபோலவே வடகிழக்குப் பருவமழை கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், இந்தமுறை மகிழ்ச்சியோடு தங்களது சாகுபடிப் பணிகளைத் துவங்கயிருக்கிறார்கள். தற்போது வைகை அணை நிலவரப்படி, நீா் மட்டம் 55.64 அடியாகவும், நீா் இருப்பு 2,823 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து 704 கனஅடியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதைய மழை அளவு 1.2 மி.மீ ஆக இருக்கும் சூழலில், வடகிழக்குப் பருவமழை வலுப்பெறும்போது, அணையிலி ருந்து தடையற்ற தண்ணீர்த் திறப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
முதல் போக சாகுபடிக்கு வைகை அணையைத் திறந்துவைத்தார் பன்னீர்செல்வம்!
TAGS :
COMMENTS