[ad_1]
நெல்லையில் சாலையோர கடைக்குள் அரசுப் பேருந்து நுழைந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நெல்லை மாநகரில் பொது இடங்களை ஆக்கிரமித்து நிறைய கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதைக் கண்காணிக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கண்டும் காணாமல் இருப்பதால, பொதுமக்கள் நடக்கவே பாதை இல்லாத அளவுக்கு புதிது புதிதாகக் கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக உள்ளூரி அரசியல்வாதிகள் நகரின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புக் கடைகளை நடத்தி வருகின்றனர்.
பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறைய ஆக்கிரமிப்புக் கடைகள் உள்ளன. அந்தப் பகுதியில் உள்ள சாலையில் அரசுப் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. மேட்டுத்திடல் பகுதியில் இருந்து நெல்லை டவுனுக்குச் சென்ற அந்தப் பேருந்து ஐகிரவுண்ட் மருத்துவமனையில் இருந்து டவுன் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அந்தப் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து நிறைய கடைகள் அமைக்கப்பட்டு இருக்கும் நிலையில், ஒருவழிச் சாலையான அந்தப் பகுதியில் இரு சக்கர வாகனம் வந்துள்ளது.
சாலையில் இடம் இல்லாத நிலையில், எதிரில் வந்த பைக்கின் மீது மோதாமல் இருப்பதற்காகப் பேருந்தைத் திருப்பியபோது சாலையோரத்தில் நான்கு சக்கர வாகனத்தில் வடை போடும் கடை நடத்தி வந்தவரின் கடைமீது மோதியது. பின்னர் சாலையின் ஓரத்தில் இருந்த வாழை இலை விற்பனை செய்யும் கடையின்மீது மோதிய பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த சுவரின் மீது மோதியதுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்த மூவரின்மீது மோதியது. அங்கு இருந்த அனைவரும் அலறியடித்து ஓடினர். இதில், 3 பேர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
சாலையோர கடைகளை நொறுக்கிய அரசு பேருந்து! அலறியடித்து ஓடிய வியாபாரிகள்
TAGS :
COMMENTS