[ad_1]





கொட்டும் மழையில் கரைபுரண்டோடும் ஆற்று நீரில் பிணத்தைச் சுமக்கமுடியாமல், கயிறுகட்டி இழுத்துச் சென்ற கொடுமை இன்று நிகழ்ந்திருக்கிறது. 

 


நாகை மாவட்டம்,  மயிலாடுதுறை அருகேயுள்ள கொற்றவநல்லூர் கிராமத்தில் ஐயம்மாள் என்ற 80 வயது மூதாட்டி இன்று இறந்துபோனார். சுமார் 300 குடும்பங்கள் வசிக்கும் அந்த ஊரில் ஒருவர் இறந்துவிட்டால், அங்கிருந்து அய்யாவு அய்யனார் ஆற்றின் வடிகால் வாய்க்காலைக் கடந்து கீழமருதாந்தநல்லூர் இடுகாட்டில்தான் அடக்கம் செய்யவேண்டும்.  இன்று அந்த வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், பிணத்தைச் சுமந்து சென்றவர்கள், கழுத்தளவு நீரில் மூழ்கிப்போக, அந்தப் பாடையை கயிறுகட்டி இழுத்து அக்கரைக்குக் கொண்டுச் சென்றார்கள். மிகவும் சிரமப்பட்டு பிணம் நீரில் அடித்துச்செல்லவிடாமல் காப்பாற்றி அந்த இடுகாட்டில் தகனம் செய்தார்கள்.  

இதுபற்றி அந்தக் கிராமவாசி ஒருவரிடம் பேசியபோது, ``காலம், காலமாக இந்தக் கொடுமை நடந்து வருகிறது. ஆற்றில் தண்ணீர் வராவிட்டால் பிரச்சனையில்லை. தண்ணீர் வந்துவிட்டால், இக்கரையிலிருந்து அக்கரைக்குப் பிணத்தைக் கொண்டு செல்வது பெரும்பாடாக இருக்கும். இதில் ஒரு பாலம் அவசியம் வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் பலமுறை வைத்தும் பயனில்லை.  இத்தனைக்கும் தற்போதைய மயிலாடுதுறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இராதாகிருஷ்ணன் எங்கள் பஞ்சாயத்தைச் சேர்ந்தவர்தான்.  இந்த பிணம் படும்பாடு அவரும் அறிந்ததுதான். உள்ளுர்காரர், இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்று அவரிடமும் முறையிட்டோம். அவரோ, நிதி இல்லை என்று கைவிரிக்கிறார். உயிரோடுதான் நிம்மதியாக வாழ முடியவில்லை. இறந்த பிறகுகூட நிம்மதியாக போய் சேரமுடியவில்லை. இது இந்த கிராமத்தின் சாபம்'' என்று முடித்தார்.  


 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்