[ad_1]




தீவிரவாத தொடர்பு இருப்பதாக காவல்துறை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் அமைப்புகளே குற்றம்சாட்ட வேண்டும்; அரசியல் லாபத்துக்காக பத்திரிகையாளர் சந்திப்புகளில் அரசியல்வாதிகள் கூறுவது முறையல்ல என்று கூறி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு, காங்கிரஸ் எம்.பி. அஹமது படேல் கடிதம் எழுதியுள்ளார். 




குஜராத் மாநிலத்தில் அம்மாநில தீவிரவாத தடுப்புப் போலீஸார் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையாக இரண்டு பேரை சமீபத்தில் கைது செய்தனர். அதில், காஸிம் ஸ்டிம்பர்வாலா என்பவர் குஜராத் மாநில காங்கிரஸ் எம்.பி. அஹமது படேல் அறங்காவலராக இருந்த மருத்துவமனையில் பணிபுரிந்ததாகக் கூறப்பட்டது. இதுகுறித்து பேசிய குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி, ’இந்த விவகாரத்தில் தங்கள் மீது எந்தவித குற்றமும் இல்லை என்று அஹமது படேல் நிரூபிக்க வேண்டும். படேல், தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார். 

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அகமது படேல் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘அமைதியின் உருவமான காந்தி பிறந்த மண்ணான குஜராத்தில் இருந்து இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டிருப்பது மாநிலத்தின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குவதாக உள்ளது. அரசியல் லாபத்துக்காக தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம். தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் அரசியல் வேறுபாடுகளைக் களைந்து நாம் ஒன்றாக நிற்க வேண்டும். தீவிரவாத தொடர்பு குறித்த குற்றச்சாட்டுகளை சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் அரசு அமைப்புகள் அல்லது நீதிமன்றங்கள் சுமத்த வேண்டுமே தவிர, அரசியல் லாபத்துக்காக கட்சி அலுவலகங்களில் நடக்கும் பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் அரசியல்வாதிகள் செய்யக் கூடாது. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதாக நான் உறுதியேற்றுள்ளேன். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் நீதிக்கும் முன் நிறுத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக எனது முழு ஒத்துழைப்பையும் உங்களுக்கு வழங்க நான் தயாராக இருக்கிறேன்’ என்று அகமது படேல் குறிப்பிட்டுள்ளார். 
 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்