[ad_1]
நடிகர் ரஜினிகாந்த் அரசியல்பிரவேசம் குறித்து சென்னையில் தன் ரசிகர்களைச் சந்தித்தபோது, "நான் பச்சைத் தமிழன்" என்று பேசியிருந்தார். மேலும், "அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம். அந்த எதிர்ப்பு இல்லாமல் யாரும் வளர முடியாது. போர் வரட்டும். அப்போது பார்த்துக்கொள்ளலாம். களமிறங்கத் தயாராக இருங்கள்" என்று ரசிகர்கள் மத்தியில் உரையாற்றினார். இதன்மூலம் அரசியலுக்கு வருவதற்கு ரஜினி தயாராகிறார் என்பது தெரியவந்தது.
ஆனால், நடிகர் கமல்ஹாசனோ மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவித்தும், டுவிட்டரில் தன் கருத்துகளை பதிவிட்டும் அரசியல் களத்தில் ஏற்கெனவே இறங்கிவிட்டதாகக் கூறினார். இதனால், சுப்பிரமணியன் சுவாமிக்கும், கமலுக்கும் இடையே மோதல் வெடித்தது. சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துக்குப் பதிலளித்த கமல், "நான் தமிழ்வாலா" என்றார். இப்படி தமிழர்களுக்கும், தமிழுக்கும் குரல்கொடுத்துவருவதாக ரஜினியும், கமலும் தெரிவித்துள்ள நிலையில், 'அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்கு இருவரும் நிதியுதவி செய்வார்களா?' என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நடிகர் விஷால், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில் ரஜினியும் கமலும் இந்த விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்த் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களாக வலம்வரும் கமலும் ரஜினியும் தமிழக அரசியல் களத்தில் இறங்குவது உறுதியாகிவிட்ட நிலையில் நடிகர்கள் விஜய், விஷால், இயக்குநர் ராம் உள்ளிட்டோரும் அரசியல் என்ட்ரிக்குத் தயாராகி வருகிறார்கள். டெல்லியில் விவசாயிகள் போராடிக் கொண்டிருந்தபோது அவர்களுக்கு ஆதரவாக களமிறங்கினார் விஷால். அதேபோன்று நடிகர் விஜய் நடித்து அண்மையில் வெளிவந்துள்ள 'மெர்சல்' படத்தில் ஜி.எஸ்.டி பற்றி வசனங்களைத் தெரிவித்து, இந்த சமூகத்தின் மீது தனக்கு அக்கறை இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அவர் அரசியலுக்கு வருவதற்கான அறிகுறிகளையும் அந்தப் படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இப்படியான சூழலில் தமிழக அரசியல் களம், அனைத்துத் தரப்பினரும் உற்றுநோக்கும் களமாக மாறிவிட்டது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்காக 10 கோடி ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் இந்த உத்தரவைத் தொடர்ந்து நடிகர் விஷால் 10 லட்ச ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
விஷால் வெளியிட்டுள்ளஅறிக்கையில், '380 ஆண்டுகளாக உலகின் சிறந்த பல்கலைக்கழகமாக இயங்கி வரும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்காக இருக்கையை ஏற்படுத்த மருத்துவர்கள் சம்பந்தனும், ஜானகி ராமனும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். அவர்களுடைய அந்தமுயற்சிக்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். மூன்று கோடி பேர் பேசும் உக்ரைன் மொழிக்கும், ஒன்றரை கோடி பேர் பேசும் செல்டிக் மொழிக்கும் ஹார்வர்டில் இருக்கைகள் உள்ளன. ஹீப்ரு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கும் கூட இருக்கைகள் உள்ளன. ஆனால், எட்டு கோடிக்கும் மேற்பட்டோர் பேசும் தமிழ்மொழிக்கு அந்தப் பல்கலைக்கழகத்தில் இருக்கை இல்லை என்பது நாம் அனைவரும் கவலைப்படவேண்டிய விஷயம். தமிழக அரசு சார்பில் பத்துகோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதற்காக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைக்க வேண்டுமானால், சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இந்த நிலையில் 17 கோடி ரூபாய் சேர்ந்துள்ளது. உலகளாவிய தமிழர்கள் ஒன்றுபட்டு இதற்கான நிதியை வழங்க முன்வர வேண்டும். மத்திய அரசும் இதற்கு உதவிசெய்யும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
விஷாலும், ஏ.ஆர். ரகுமானும் நிதியுதவியை வழங்கி, தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ள நிலையில் தமிழ் மக்களுக்காகவும், தமிழர்களுக்காகவும் "நான் உள்ளேன்" என்று குரல் கொடுப்பவர்கள் எங்கே போனார்கள் என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து அரசியல் விமர்சகர் பாலுவிடம் பேசியபோது, "ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிக்கு நிரந்தர இருக்கை அமைக்க, தமிழக அரசே நடவடிக்கை எடுக்கலாம். குறிப்பாக தமிழ் வளர்ச்சி மேம்பாட்டு நிதி, முதலமைச்சரின் மேம்பாட்டு நிதி போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும். மேலும், கூடுதலாக நிதி தேவைப்படுகிறது என்றால், தமிழக அரசே இதற்காக தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்களிடம் கோரிக்கைவைத்து நிதி வசூல் செய்யலாம். அதேபோன்று ரஜினி, கமல் போன்றவர்களும் இதில் தங்களை ஒருங்கிணைத்துக்கொண்டால் நல்லதுதான். 'தமிழ், தமிழ்' என்று வெறும்பேச்சோடு நிறுத்திக்கொள்ளாமல், தமிழ் இருக்கைக்கு நிதியுதவி செய்வதுடன், மற்றவர்களும் நிதியுதவி செய்ய அவர்கள் கோரிக்கை வைக்க வேண்டும். மேலும், தங்களின் புகழுக்காக இதைச் செய்யாமல் தமிழ் உணர்வுக்காக செய்ய வேண்டும்" என்றார்
அரசியல் விமர்சகரும், காந்திய மக்கள் கட்சித் தலைவருமான தமிழருவி மணியனிடம் பேசியபோது, "புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக பலரிடம் பலமுறை உதவிகள் கேட்டுள்ளேன். உதவக்கூடிய வகையில் என்னிடம் பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் நான் பங்களிப்பு வழங்க முடியவில்லை. தமிழ் மொழிக்கு இருக்கை அமைக்க வேண்டும் என்பதற்காக, செல்வந்தர்கள் பலரிடம் ஆலோசனை நடத்தினேன். அப்படி நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில்தான் முடிந்தது. அதனால் அந்த முயற்சியை கைவிட்டு விட்டேன். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய வேண்டும் என்பதற்காக, பத்து கோடி ரூபாய் நிதி வழங்குவதாக அறிவித்துள்ள தமிழக அரசின் செயல்பாடு பாராட்டுக்குரியது. அதேபோன்று நடிகர் விஷால் நிதியுதவி அளித்திருப்பதும் வரவேற்கத்தக்கது. திரைப்படத்துறையில் உள்ள மற்ற நடிகர், நடிகைகளும் இதற்காக நிதியுதவி செய்வார்களேயானால், எந்தச் சிரமமும் இன்றி தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சி வெற்றி பெறும்' என்றார்.
மேலும், "தமிழ், தமிழர்கள்" என ஆரம்பத்தில் இருந்து முழங்கிக் கொண்டிருக்கும் கமலும், ரஜினியும் தமிழ் இருக்கைக்கு நிதியுதவி செய்வது பற்றி எதுவும் கூறவில்லையே? நிதியுதவி செய்யுமாறு இருவருக்கும் கோரிக்கை வைப்பீர்களா?" என்று கேட்டதற்கு, "இந்த விவகாரத்தில் அவர்களுக்கு நான் கோரிக்கை வைக்க விரும்பவில்லை. காரணம், தமிழ் இருக்கை பற்றி அவர்களுக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. தமிழருவி மணியன் கூறித்தான் அவர்களுக்கு தமிழன் என்ற உணர்வு வரவேண்டும் என்பதில்லை. தமிழ் உணர்வு என்பது அவர்களுக்கே இருக்க வேண்டும். திரைப்படத்துறையில் உள்ள வசதி படைத்தவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்தாலே போதும். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைத்துவிடலாம். நிதிக்காக யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டிய அவசியமிருக்காது" என்றார்.
"தமிழ், தமிழ்" என முழங்குபவர்களே! இப்போது உங்கள் உணர்வுகள் வெளிப்படுமா?
"பச்சைத் தமிழனும், தமிழ்வாலாவும்" தமிழ் இருக்கைக்கு உதவுவார்களா?
TAGS :
COMMENTS