[ad_1]
'சென்னையில், ஆற்றங்கரையோரம் குடிசையில் வசிக்கும் மக்களை, 'ஆக்கிரமிப்பு' என்ற பெயரில் வெளியேற்றுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்' என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பளர் திருமுருகன் காந்தி தெரிவித்தார்.
சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் இன்று, பத்திரிகையாளர்களைச் சந்தித்த திருமுருகன் காந்தி, “செப்டம்பர் 9 மற்றும் 15 அன்று, 'ஆக்கிரமிப்பு' என்ற பெயரில் மதுரவாயல், எம்.எஸ்.பி நகர் மற்றும் அமைந்தகரையிலிருந்து 347 குடும்பத்தாரை வலுக்கட்டாயமாக அவர்களது வீடுகளிலிருந்து சென்னை மாநகராட்சி அப்புறப்படுதியது. மேலும், அவர்கள் தற்போது இருக்கும் பகுதியிலிருந்து வெகு தூரத்தில் அவர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. எந்தவித கள ஆய்வும் மேற்கொள்ளாமல், இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒருவர் வாழ்ந்த இடத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் வாழ வைத்தால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். சில சமயம் அவர்களின் வாழ்வாதாரம் அழிந்துவிடுவதற்கான வாய்ப்புகூட உள்ளது. ஆக்கிரமிப்பு என குடிசை மக்களை மாற்றும் அரசு, அதே பகுதியில் இருக்கும் கார்ப்பரேட் மற்றும் வணிகக் கட்டடங்களை அப்புறப்படுத்த மறுக்கிறது. கடந்த வருட நவம்பரில் இடம் மாற்றப்பட்ட 12 குடும்பங்களுக்கு, இன்று வரை மாற்று இடம் வழங்கப்படவில்லை.
நல்லதண்ணி குப்பம் பகுதியிலும் 'சாலை விரிவாக்கம்' என்ற பெயரில் பல மீனவக் குடும்பத்தினர் வெளியேற்றப்படுகின்றனர். இதற்கு மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் சர்வே எண், நடுக்கடலில் உள்ளது. 2015-ல் நிகழ்ந்த வெள்ளத்தைக் காரணமாகக்கொண்டும் உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணையைக்கொண்டும் சென்னை மாநகராட்சி, குடிசை மாற்று வாரியம் முதலியன கிட்டதட்ட 55,000 குடும்பங்களை வெளியேற்ற இருக்கிறார்கள். அடையாறு, கூவம், வடக்கு, தெற்கு, மத்திய பக்கிம்காம் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 55,000 குடும்பங்கள் வெளியேற்றப்பட இருக்கிறார்கள். அதே வேளையில், கார்ப்பரேட் மற்றும் வணிக நிறுவனங்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. குடிசையில் வாழும் மக்களுக்குக் கொடுக்கப்படும் மாற்று இடமும் வெள்ளத்தால் பாதிக்கும் பகுதியாகவே உள்ளது. எனவே, ஏழை எளிய மக்களை வெளியேற்றுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
’சென்னை ஆற்றங்கரையோரம் இருக்கும் 55,000 குடும்பங்களை வெளியேற்றுவதை நிறுத்துங்கள்’ - மே 17 இயக்கம் வலியுறுத்தல்
TAGS :
COMMENTS