சினிமாவில் ஓவராக ஆடியவர்கள் எல்லாம் தலைகுப்புற விழுந்த கதைகள் ஏராளம். வெளிச்சத்தில் இருக்கும்போது ஆடியவர்கள் இருளில் அனுபவித்ததை எல்லாம் தெரிந்துகொண்டால் இன்றைக்கு இருக்கும் இளம் நடிகர்கள் அடக்கி வாசிப்பார்கள். அப்படி ஓவராக ஆடி இப்போது அவமானப்பட்டு நிற்கிறார் நடிகர் ஜெய்.

பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக அறிமுகமானவர்தான் ஜெய். அதன் பின் அலை, தேவதையை கண்டேன் படங்களில் தலைகாட்டியவருக்கு அடித்த லக் தான் வெங்கட்பிரபு இயக்கிய சென்னை 28 படத்தில் நடிக்க வந்த வாய்ப்பு. அந்த படத்துக்கு பின் சுப்ரமணியபுரம் ஜெய்க்கு பெரிய விசிட்டிங் கார்டாக அமைந்தது. ட்ரெண்ட் செட்டர் படமான சுப்ரமணியபுரத்துக்கு பிறகு ஜெய்க்கு வாய்ப்புகள் வந்து குவிந்தன. தலைக்கனமும் வந்து சேர்ந்தது.

ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் நடித்துக்கொண்டிருந்தவர் ஒரு பேட்டியில் வாய்க்கொழுப்பாக 'நான் நடித்துக்கொண்டிருக்கும் படங்களில் வாமனன் மட்டும்தான் ஓடும்' என்று சொல்லி மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் வயிற்றில் நெருப்பைக் கொட்டினார். விளைவு எங்கேயும் எப்போதும் ஹிட்டுக்கு பின்னர் கூட இரண்டு ஆண்டுகள் படங்கள் இல்லை. ஒருவழியாக ராஜா ராணி வந்து கை கொடுத்தது. இப்படி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு ஹிட் கொடுக்கும் ஜெய் தனது படங்களின் தயாரிப்பாளர்களை படுத்தும் பாடு சொல்லி மாளாது.

ஜெய்யின் மொபைல் எப்போதுமே ரிங் மட்டும்தான் போகும். அட்டெண்ட் ஆகாது. புரமோஷனுக்கு வர மாட்டார். கேட்டால் அஜித் வருகிறாரா? என்று அங்கே கையை காண்பிப்பார். சமீபத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம்... மினிமம் பட்ஜெட்டில் பெரிய ஹிட் கொடுத்து வரும் அந்த தயாரிப்பாளர் தனது படம் ஒன்றில் நடிக்க ஜெய்யிடம் பேச ஜெய்யும் ஓகே சொன்னார். பின்னர் சில நாட்கள் ஜெய்யை அவராலேயே பிடிக்க முடியவில்லை. கடுப்பாகி வேறு ஹீரோவைத் தேடிக்கொண்டிருந்தபோது ஜெய்யே லைனுக்கு வந்து கெஞ்ச சமாதானமானார். ஆனால் சம்பளம் குறைக்கப்பட்டுவிட்டது.

இதுபோல ஏராளமான உதாரணங்களை சொல்லலாம். எங்கேயும் எப்போதும் படத்தில் இருந்தே ஜெய் - அஞ்சலி காதல் செய்திகள்தான் மீடியாவுக்கு தீனி போட்டது. இடையில் அஞ்சலி அவ்வளவு பெரிய பிரச்னையில் மாட்டியபோது ஜெய் எங்கே போனார் என்று தெரியவில்லை. ஆனால் அஞ்சலி மீண்டும் வந்ததும் அவருடன் நெருக்கமானார். இப்போது ஜெய்யின் குணம் காரணமாக ஜெய் - அஞ்சலி காதலும் பிரேக் அப் ஆகிவிட்டது.

எப்போதும் குடியுடன் இருக்க அதற்கேற்ற நண்பர்களாக தேடிக்கொண்டார் ஜெய். நேற்று முன் தினம் அப்படி அதீத போதையில் கார் ஓட்டி அதனை போலீஸ் பேரிகார்டுகளில் மோதி இப்போது வழக்குக்கு ஆளாகி இருக்கிறார். இது இரண்டாவது முறை என்பதால் அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படலாம்.

நன்றாக வர வேண்டிய ஒரு நடிகர் தனது நடத்தைகள் காரணமாக சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறார்.

English summary


Here is the brief details about ups and down of actor Jai's acting career.