நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், 'கட்சி கடந்து மாநிலம் கடந்து அனிதாவுக்காக வெகுண்டெழ வேண்டும்' என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

 

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர் தந்தை சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டைத் தூக்கும் தொழில் செய்துவருகிறார். ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த அனிதா, ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார். இவரது கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 196.5. நீட் தேர்வு எழுதிய அனிதாவின் கட்-ஆஃப் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது. மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட அனிதாவுக்கு நீட் தேர்வு பெரும் இடியாக விழுந்தது. நீட் தேர்வின் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரும் மனுவை, சில மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ளனர் என்றும், இந்த மனுவை அவசர மனுவாகக் கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் முறையிட்டார். இந்த மனுவில் எதிர் மனுதாரராக அனிதா சேர்க்கப்பட்டார். அப்போது, ''நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடந்தால், தனக்குக் கிடைக்க வேண்டிய மருத்துவ இடம் கிடைக்காமல்போகும்; மருத்துவராகும் கனவு பறிபோய்விடும்" என உச்ச நீதிமன்றத்தில் அனிதா மனு அளித்தார். ஆனால், நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கவுன்சலிங் நடைபெற்றது. இதனால் மனமுடைந்த அனிதா தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், 'அனிதா என்ன ஊர், என்ன பெயர் என்றெல்லாம் நான் பார்க்க விரும்பவில்லை. என் பெண்ணாக இருந்தால்தான் நான் கோபப்பட வேண்டுமா? கனவோடு வந்தவ அனிதாவை மண்ணோடு மண்ணாக அனுப்பிவிட்டோம். கட்சி கடந்து, மாநிலம் கடந்து, இந்த விஷயத்துக்காக வெகுண்டெழ வேண்டும். மக்கள் அனைவரும் அனிதாவுக்காக போராட வேண்டாம். மத்திய அரசு, மாநில அரசு, நீதிமன்றங்கள் எல்லாம் நாம் அமைத்தது. அங்கேயெல்லாம் போய் நாம் தான் நன்றாக வாதாட வேண்டும். ஆனால், வாதாட வேண்டியவர்கள் எல்லாம் பேரம் பேசிக் கொண்டிருந்தால் எப்படி மக்களால் வாழ முடியும். இந்த மாதிரி தற்கொலைக்குப் பிறகுதான் பாடம் கற்பீர்களா? அப்படி ஒன்றும் நீங்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டாம். நாங்கள் உங்களுக்கு  பாடம் கற்றுக்கொடுக்கிறோம்' என்று பேசினார்.

பின்னர் செய்தியாளர்கள், 'விரைவில் கட்சி தொடங்குவீர்களா?' என்ற கேள்விக்கு, 'கட்சி தொடங்குவது பற்றி கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பேசினேன். இன்னும் சில அரசியல் தலைவர்களையும் பார்த்து கருத்துகளையும் கேட்டறிவேன். அதன் பின்னர் கட்சி தொடங்குவது பற்றி என் முடிவை அறிவிப்பேன். கட்சி தொடங்கும் பட்சத்தில் நான் கண்டிப்பாக காவி பக்கம் சாயமாட்டேன். கேரளாவைப் பாருங்கள். இங்கு மக்கள், அரசு செயல்படுத்தும் திட்டங்கள்குறித்து பெறுமைப்பட வேண்டும்' என்று பதில் அளித்தார்.