
நீட் தேர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் திருச்சியில் செப்டம்பர் 8-ம் தேதி கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதாவின் மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நீட் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தி.மு.க. தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் கலந்துகொண்டன. தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்காத மத்திய அரசுக்குக் கண்டனம், மாணவி அனிதாவுக்கு இரங்கல், பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்துவது மற்றும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்துவது என 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின், ‘ நீட் தேர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் முதற்கட்டமாக திருச்சியில் செப்டம்பர் 8-ம் தேதி மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. நீட் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தப் பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். அந்தப் பொதுக்கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவிக்க இருக்கிறோம். மத்திய, மாநில அரசுகள் விழிப்படையும் வகையில் அடுத்தகட்ட போராட்டம் இருக்கும். அனிதாவின் மரணத்தை திசைதிருப்பும் முயற்சியில் கிருஷ்ணசாமி ஈடுபட்டிருக்கிறார். அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அவர் கூறினார்.
நீட்டுக்கு எதிராகக் கைகோர்த்த எதிர்க்கட்சிகள்! - திருச்சியில் கண்டனப் பொதுக்கூட்டம்
TAGS :
COMMENTS