நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் எட்டுப் பேரை, இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்ற சம்பவம், மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரம்பர்ய பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்துச் செல்வது தொடர் நிகழ்வாக நடந்துவருகிறது. இதனால், ராமநாதபுரம் மாவட்டம் உள்ளிட்ட பாக் நீரிணைப்புப் பகுதியை நம்பி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்களும் அவர்களை நம்பியுள்ள சார்பு தொழிலாளர்களும், வருவாய் இழந்து, பஞ்சம் பிழைக்க ஊரைவிட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மீன்பிடிக்கச் சென்றபோது, மீனவர்களின் வாழ்வாதாரமாகத் திகழும் விசைப்படகுகளைச் சிறைப்பிடித்துச் செல்லும் இலங்கைக் கடற்படை, தமிழக மீனவர்கள்மீது பொருளாதார ரீதியாகவும் தாக்குதலைத் தொடுத்துவருகிறது. இதுவரை, 185-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், இலங்கைக் கடற்படையின் பிடியில் உள்ளன. இதனால், குறைந்த அளவான மீனவர்களே மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற எட்டு மீனவர்களையும், அவர்களது இரண்டு விசைப்படகுகளையும், இலங்கைக் கடற்படையினர் இன்று அதிகாலை சிறைப்பிடித்துச் சென்றனர். நெடுந்தீவு அருகே சிறைப்பிடித்துச்செல்லப்பட்ட மீனவர்கள், விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விசாரணைக்குப் பின், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
ஏற்கெனவே, இலங்கைச் சிறையில் 19 மீனவர்கள் உள்ள நிலையில், இன்று மேலும் எட்டு மீனவர்கள் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டிருப்பது, மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் 8 பேர் சிறைப்பிடிப்பு! இலங்கைக் கடற்படை மீண்டும் அட்டூழியம்
TAGS :
COMMENTS