ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி 5 ஒரு நாள், 3 'டி20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒரு நாள் போட்டி வரும் 17ல் சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவுள்ளது.

அடுத்தடுத்த போட்டிகள் கோல்கட்டா (செப். 21), இந்துார் (செப். 24), பெங்களூர் (செப். 28), நாக்பூரில் (அக். 1) நடக்கும். மூன்று 'டி20' போட்டிகள் ராஞ்சி (அக்.7), கவுகாத்தி (அக். 10), ஹைதராபாத்தில் (அக். 13) நடைபெறும்.

இதில் முதல் 3 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததை போலவே அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இலங்கை சுற்றுப் பயணத்தை போலவே இப்போதும் யுவராஜ்சிங்கிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இலங்கை தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டது, ஆஸி.க்கு எதிரான தொடரில் யுவராஜுக்கு வாய்ப்பு அளிக்கத்தான் என்ற எதிர்பார்ப்பு இதன் மூலம் பொய்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி விவரம்: விராட் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், ராகுல், மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், அஜிங்ய ரஹானே, டோணி, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், சஹல், ஜஸ்ப்ரிட் பும்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், முகமது ஷமி.

English summary


Umesh Yadav and Mohammed Shami return to India's 15-member ODI squad for first three games against Australia. Spinners Ravichandran Aswhin and Ravindra Jadeja rested.