முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக, டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த 19 எம்எல்ஏ-க்களும் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்துள்ளனர். இதையடுத்து, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், 'சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டுவந்தால், அதைப் பரிசீலிப்போம்' என்று கூறியுள்ளார்.

 

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், 'ஊழல் அ.தி.மு.க அணிகளை இணைப்பதற்கு மோடி துணை நின்றிருக்கிறார். அவர் நேற்று வாழ்த்துச் சொன்னதே, அதற்கான சாட்சி. அ.தி.மு.க-வின் ஒரு பிரிவு எம்எல்ஏ-க்கள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றிருக்கின்ற நிலையில், ஆளுநர் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும்பட்சத்தில் அதைப் பரிசீலிப்போம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

நேற்று, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அணியும், ராயப்பேட்டையில் இருக்கும் கட்சியின் தலைமைக் கழகத்தில் இணைந்தன. பல நாள்களாக நடந்துவந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, நேற்று சுமுகமான முடிவு எட்டியது. இதையடுத்து, இரு அணிகளும் இணைந்தன. இந்த இணைப்புக்குப் பின்னர், டி.டி.வி.தினகரன் தலைமையிலான எம்எல்ஏ-க்கள், இந்த இணைப்புகுறித்து தொடர் விமர்சனம்செய்துவந்தனர். இதையடுத்துதான், தினகரன் அணியின் 19 எம்எல்ஏ-க்கள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப்பெறுவதாக இன்று தெரிவித்துள்ளனர்.