
நாகர்கோவில் அரசு அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியை உடனடியாகத் திறக்கக் கோரியும், அடிப்படை வசதிகளைச் செய்துதரக் கோரியும் மாணவ மாணவியர் கறுப்பு பேட்ஜ் அணிந்து வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவிலில் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. தற்காலிகமாக, நாகர்கோவில் வடசேரி நெசவாளர் தெருவில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள ஒரு கட்டடத்தில் கல்லூரி வகுப்பறைகள் இயங்கத் தொடங்கின. முதற்கட்டமாக பி.ஏ. ஆங்கிலம், பொருளாதாரம், பி.காம். ஆகியவை தொடங்கப்பட்டன. தற்போது 250 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
கடந்த வாரம், இந்த ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கையும் நடந்தது. இதற்கிடையே அரசுக் கலை அறிவியல் கல்லூரிக்கு என, நாகர்கோவில் கோணத்தில் 7.50 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. தற்போது கட்டுமான பணிகள் எல்லாம் முடிவடைந்து, கட்டடம் திறப்பு விழாவுக்காகக் காத்திருக்கிறது. ஆனால், இன்னும் தமிழக அரசு இந்தக் கட்டடத்தைத் திறக்க உத்தரவிடவில்லை. இதனால் தற்காலிகக் கட்டடத்தில் போதிய வசதிகள் இல்லாமல் மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
கல்லூரிக்கு என இந்தப் பள்ளியில் 4 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 3 அறைகளில் வகுப்பறைகளும், ஒரு அறை நிர்வாக அலுவலகமாகவும் செயல்படுகிறது. ஆனால், வகுப்பறைகளுக்குத் தேவையான போதிய உபகரணங்கள் இல்லை. குறிப்பாக டெஸ்க், பெஞ்ச் இல்லாத நிலை உள்ளது. மேலும் ஆசிரியருக்குத் தேவையான டேபிள் சேரும் கிடையாது. இது பற்றி பலமுறை பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், இன்று மாணவர்கள் கல்லூரியை உடனடியாகத் திறக்கக்கோரி வகுப்புகளைப் புறக்கணித்து கறுப்பு பாட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய கல்லூரியைத் திறக்கக் கோரி மாணவ மாணவிகள் போராட்டம்..!
TAGS :
COMMENTS