மதுரைக்குள் செல்லும் வைகை ஆற்றின் பாதைகள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சமூக ஆர்வலர்கள் தாக்கல் செய்துள்ள வழக்குகள் விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வைகை ஆற்றிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற மதுரை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகத்துக்கும் உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஏ.வி.பாலம் அமைந்திருக்கும் வைகையாற்றின் வடகரைப்பகுதியில் எட்டுமாடி கட்டடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. நீர்நிலைப்பகுதியில் குடியிருப்புகள் கட்டக்கூடாது என்ற விதிகள் இருக்கும் நிலையில், ஐந்து வருடமாக இக்கட்டடத்தை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. பேருக்கு ஒரு வழக்கு போடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இக்கட்டடத்தை மக்கள் சுலபமாகச் சென்று வர முடியாத அந்தப் பகுதியில் பிரபல ஜவுளி நிறுவனம் மால் ஒன்று திறக்க வேலை செய்து வருகிறது. அது மட்டுமல்லாமல், அருகேயுள்ள வைகையாற்றில் ஒரு பகுதியை வாகன நிறுத்தமாகப் பயன்படுத்தி வருகிறது இந்த நிறுவனம். சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் ஆற்றிலிறங்கும் இடத்தில்தான் இந்த ஆக்கிரமிப்பைச் செய்துள்ளனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவது தெரிந்தும் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். அதிகாரிகள் இதற்கு உடந்தையாக உள்ளதாக அப்பகுதி பொது மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.