
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காத நிலையில் அவரால் நியமிக்கப்பட்ட தினகரனால் அறிவிக்கப்பட்ட நியமனங்கள் செல்லாது என்பது உள்ளிட்ட 4 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மிக முக்கியமாக, 'ஜெயா டி.வி-யும் 'நமது எம்.ஜி.ஆர்' நாளிதழ்களும் கழகத்தின் சொத்துகள். எனவே, அவற்றை மீட்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயா டி.வி-யின் விவேக் ஜெயராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தத் தீர்மானம் வெளியானதைத் தொடர்ந்து ஜெயா டி.வி-யின் தலைமைச் செயல் அதிகாரி விவேக் ஜெயராமன், 'இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய சிலர் ஜெயா தொலைக்காட்சியையும் நமது எம்.ஜி.ஆரையும் மீட்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தீர்மானம் இயற்றி இருக்கிறார்கள். இது மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஜெயா தொலைக்காட்சியும் 'நமது எம்.ஜி.ஆர்' நாளேடும் தனியார் நிறுவனங்கள். யாரும் சர்வ சாதரணமாக உள்ளே புகுந்து கைவசமாக்கக் கூடிய நிலையில் இரு நிறுவனங்களும் இல்லை. இந்த விவரங்கள் தெரிந்திருந்தும், அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக ஜெயா தொலைக்காட்சியை மீட்கப் போவதாக தீர்மானம் இயற்றி இருப்பது மக்கள் அபிமானம் பெற்ற ஓர் ஊடகத்துக்கு விடப்பட்டிருக்கும் பகிரங்க மிரட்டலாகத்தான் தெரிகிறது. இருப்பினும் இந்த மிரட்டல்களை நெஞ்சிறுதியோடு எதிர்த்து நிற்போம்' என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'தனியார் நிறுவனங்களான ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆரை யாரும் கைப்பற்ற முடியாது!'- விவேக் ஜெயராமன் பதிலடி
TAGS :
COMMENTS